

சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராணிப்பேட்டையில் தி.மு.க. சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று தொடக்க உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம்? என்பது கண்டுபிடிக்கப்படும். அவர்களை கொண்டு வந்து கூண்டில் ஏற்றுவோம். மக்கள் முன்னால் நிற்க வைப்போம். டெல்லியில் 33-வது நாளாக கோடிக்கணக்கில் விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விவசாயிகள் அதற்கு ஆதரவாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல கோரிக்கைகளை வைத்து தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி எல்லாத்தரப்பு மக்களுக்கும் எவ்வளவு பிரச்சினைகள். முக்கிய பிரச்சினையாக இருக்கக்கூடிய 100 நாள் வேலைத்திட்டம், 150 நாட்களாக உயர்த்தப்படும். பொங்கலுக்கு ரூ.2,500 கொடுக்கப்போவதாக சொல்லி இருக்கிறார்கள். சில இடங்களில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் சில புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.
தேர்தல் கமிஷனில் புகார்
ஏதோ அ.தி.மு.க. பணத்தை எடுத்துக்கொடுப்பது போல முதல்-அமைச்சர் படத்தை மட்டும் அல்ல அந்த தொகுதி எம்.எல்.ஏ., அந்த மாவட்டத்தின் அமைச்சர் படம் இதையெல்லாம் போட்டு, அ.தி.மு.க. காரர்களாகப் பார்த்து கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இதை பற்றித்தான் நம்முடைய வக்கீல்கள், தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்தார்கள். இதனை கட்சிக்கு பயன்படுத்துகிறார்கள். தேர்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆகவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். பொங்கல் பரிசு குறித்து நாங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை பொய் என்று முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கியிருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தி.மு.க. இதைத் தடுக்க முயற்சி எடுக்கிறது என்று சொல்கிறார். நாங்கள் தடுக்க முயற்சிக்கவில்லை. நியாயமாக கொடுக்கவேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்திய காரணத்தால் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி தி.மு.க.வுக்கு கிடைத்தது. இப்போது மக்கள் கிராமசபைக் கூட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி முடித்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கப்போகிறோம். நாடாளுமன்றத்தில் எவ்வாறு 39 இடங்களில் 38-ல் வெற்றி பெற்றோமோ, அதேபோல் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறப்போகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து மக்கள் கிராம சபை கூட்டத்தை நிறைவு செய்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், வேலை இழந்து தவித்துக்கொண்டிருக்கக்கூடிய மக்கள் நலப்பணியாளர்களுக்கு உடனடியாக மீண்டும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
யார் முதல்-அமைச்சர் என்ற கேள்விதான் இப்போது அ.தி.மு.க.வில் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய மோடிதான் முடிவு செய்வார் என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். எந்த நேரத்தில் ஓ.பி.எஸ். அந்த கட்சியிலிருந்து கழன்று செல்வார் என்று தெரியவில்லை. எப்போது அந்தக்கட்சி உடைய போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அ.தி.மு.க. உடைய போகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
தி.மு.க.வைப் பொறுத்த வரைக்கும் முதல்-அமைச்சர் வேட்பாளர்கள் எல்லாம் இல்லை. தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் யார் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்று கேட்டால் யாரைச் சொல்வீர்கள்? (கூட்டத்தில் இருந்தவர்கள் மு.க.ஸ்டாலின் என்று கூறினார்கள்). மக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை ஆட்சியில் அமர்ந்ததும் செய்யப்போகிறோம். அதில் உறுதியாக இருக்கிறோம். கடந்த 10 வருடங்களாக என்னென்ன பிரச்சினைகள் இருக்கின்றனவோ, அவை அனைத்திற்கும் முடிவு கட்டப்போகிறோம். நாடு நம் பக்கம் இருந்தால்தான், தி.மு.க. பக்கம் இருந்தால் தான், தி.மு.க. ஆட்சியில் இருந்தால் தான், இந்த நாடு சிறப்பாக இருக்கும், வளரும்.
இவ்வாறு அவர் பேசினார்.