மக்களுக்கான சிறப்பான நல்லாட்சியை வழங்க அயராது உழைப்போம்: டாக்டர். டி.கே. பிரபு

தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என டாக்டர். டி.கே. பிரபு தெரிவித்தார்.
மக்களுக்கான சிறப்பான நல்லாட்சியை வழங்க அயராது உழைப்போம்: டாக்டர். டி.கே. பிரபு
Published on

சென்னை,

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர். டி.கே. பிரபு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக அமைச்சரவையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின், தமிழக முதல்-அமைச்சர் தலைவர் தளபதி அவர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றேன். இந்த உயர்ந்த பொறுப்பை வழங்கி, மக்கள் நலனுக்காக மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கிய முதல்-அமைச்சர் , ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்தக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையையும், கழகம் அளித்திருக்கும் பொறுப்பையும் முழுமையாக உணர்ந்து, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொகுதி மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, இந்த பொறுப்பிற்கு முழு நியாயம் செய்வேன்.

முதல்-அமைச்சர் தலைமையில், தமிழகத்தின் வளர்ச்சி பயணத்தில் என்னுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்குவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்தவும், மக்களுக்கான சிறப்பான நல்லாட்சியை வழங்கவும் அயராது உழைப்போம்.

சட்டவிரோத குவாரி அமைத்தல், கனிம வளங்கள் கடத்தப்படுதல் மற்றும் இயற்கையை சுரண்டுதல் ஆகிய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படும். அதே வேளையில், முறையாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமலும் எடுக்கப்படும் கனிம வளங்கள் வாயிலாக, புதிய தொழில் முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த வழிவகை செய்யப்படும்.

சமூக நீதி, சமவாய்ப்பு மற்றும் உறுதியான மதச்சார்பற்ற கொள்கைகளின் அடிப்படையில் எங்களது மக்கள் பணி எவ்வித சமரசமுமின்றி நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com