

சென்னை,
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் ரஜினிகாந்த் பற்றி காட்டமாக ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இவைதான் ஆன்மிக அரசியலா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது.
அரசியல் களத்தில் முழு மூச்சாக இறங்கும் முன் ரஜினிகாந்த் ஆழம் பார்க்க எடுத்து வைத்த முதல் அடியிலேயே சறுக்கி விழுந்துள்ளார். அவரது தூத்துக்குடி விஜயம் அதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி பின்னர் விமான நிலையத்தில் நிருபர்கள் மத்தியிலே அவர் ஆத்திரத்தில் வெடித்தது, இவை எல்லாமே அவரது நிலைகுலைந்த தன்மையை வெளிக்காட்டுவதாகவே இருந்தது.
ஆன்மிக அரசியல் நடத்தப்போவதாக அறிவித்த அவரது ஆன்மிகம் கேள்விக்குறியாகி விட்டது. யாரோ ஒருவர் இயக்க, அதன்படி இயங்கி வெற்றி பெறுவது சினிமாவில் சாத்தியமாகலாம்.
ஆனால் அரசியலில் அது இயலாத ஒன்று என்பதை அவரது தூத்துக்குடி விஜயமும் அதன் விளைவுகளும் அவருக்குத் தெளிவாக்கியிருக்கும் என நம்புகிறோம்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது தன் நிலை மறந்து பதற்றத்தோடு வெடித்துவிட்டு, அதற்கு பலத்த எதிர்ப்பு பல திக்குகளிலிருந்து கிளம்பிய பிறகு வருத்தம் தெரிவித்த ரஜினி, தன் கருத்துக்கு எதிராக மறுப்புத் தெரிவிக்கும் வகையில், மறுநாள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நான் ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்ன மாதிரி என்று திரைப்படங்களில் பஞ்ச் டயலாக் பேசிய ரஜினிதான், சொன்னதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழகம் சுடுகாடாகி விடும் எனக் கருத்து கூறியுள்ளார் ரஜினி. அப்படிக் கேள்வி எழுப்பியிருப்பது எந்த ரஜினி தெரியுமா? விரைவில் வர இருக்கும் தனது திரைப்படமான காலாவில் அனைத்துக்கும் போராடுவோம். புரட்சி உருவாக்கப் போராடுவோம்...எனப்பாடி நடித்துவிட்டு நிழலில் ஒன்று, நிஜத்தில் வேறு ஒன்று எனச்செயல்படுவதுதான் ஆன்மிக அரசியலா? ரஜினி தெளிவாக்க வேண்டும்.
போராட்டத்துக்கு எதிராக விமர்சனங்களை வைத்ததே, அவர் யாராலோ ஏவப்பட்ட அம்பாகச் செயல்படுகிறார் என்பதைத் தெளிவாக்கவில்லையா?. இதனைத்தான் தெளிவாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிப்படுத்தி உள்ளார். ரஜினியின் குரல் அல்ல, அது வேறு யாருடைய குரலாகவோ தெரிகிறது என்று.
அரசியல் சூட்டின் வேகத்தை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அனுபவித்து அடக்கி வாசித்த ரஜினி அவர் அன்று நேரிடையான அரசியல்வாதி அல்ல. ஆனால் இன்று யாருடைய அச்சறுத்தலுக்கோ பயந்து அரசியல் களத்தில் குதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.