திருமண மண்டபங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - மண்டப உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த நாட்கள் வருவதால் 50 சதவீதம் பேருடன் மண்டபங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு, திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திருமண மண்டபங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் - மண்டப உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை
Published on

சென்னை,

அனைத்து கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.ஜான் அமல்ராஜ், துணைத்தலைவர் எஸ்.எஸ்.எஸ்.சந்திரன், ஆலோசகர் ராஜசேகர் ஆகியோர் சென்னையில் நேற்று கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக திருமண மண்டபங்கள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக சுமார் 1 லட்சம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருமானம் இழந்து தவித்து வருகிறார்கள்.

வங்கியில் வாங்கிய கடனை கட்டுவதற்கும், ஊழியர்கள் மாத சம்பளம், கட்டாய மின் கட்டணம், சொத்து, தொழில் வரி செலுத்துவதற்கும் மற்றும் முன்பதிவு பணத்தை திருப்பித் தருவதற்கும் என மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.

கடந்த 5 மாதங்களில் திருமண நிகழ்ச்சிகள் மூலமாகவும், பல்வேறு வரிகளின் மூலமாகவும், சமையல், மளிகை, ஜவுளி, ஆபரண நகை விற்பனை வழியாகவும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு தமிழக அரசுக்கும், ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு மத்திய அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தீவிரம் குறைவதை தொடர்ந்து ஊரடங்கில் அடுக்கடுக்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் 50 பேருடன் திருமண மண்டபங்களை சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறார்கள். வெறும் 50 பேருடன் திருமணம் என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் சமையல், பராமரிப்பு ஊழியர்களே 50 பேருக்கு மேல் வந்துவிடுவார்கள்.

எனவே எங்களின் வாழ்வாதாரம் காக்க இடவசதிக்கு ஏற்ப 50 சதவீத பேருடன் திருமண மண்டபங்களை திறந்து அதில் சுப நிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கவேண்டும். குறிப்பாக 25 சதுர அடிக்கு ஒருவர் என்ற வீதத்தில் அனுமதி வழங்கவேண்டும். ஆவணி மாதத்தில் அதிக முகூர்த்த நாட்கள் வருவதால் மண்டப கட்டணத்தை பாதியாக குறைக்கவும் தயாராக இருக்கிறோம். அரசின் அனைத்து விதமான பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்ற தயாராக இருக்கிறோம். எனவே திருமண மண்டப உரிமையாளர்களின் வாழ்வாதாரம் காக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com