

குமரி,
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பய ணிகள் வந்து செல்கிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அந்தவகையில் விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அதிகாலை சன்ரைஸ் பாயிண்ட், திரிவேணி சங்கமம் உள்ளிட்ட பகுதிகளில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், மேகமூட்டத்திற்கு இடையே சற்று தாமதமாக உதயமான சூரியனின் அழகிய காட்சியைக் கண்டு ரசித்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் காலை 8 மணிக்கு படகு சேவை தொடங்கியதும் ஆவலுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர். அத்துடன் கண்ணாடி நடை பாலம் வழியாக நடந்து சென்று திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட்டனர்.
சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா போன்றவற்றில் கூட்டம் அலைமோதியுள்ளது. இதையடுத்து சுற்றுலா போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.