

நாமக்கல்,
வார விடுமுறையையொட்டி புளியஞ்சோலை ஆற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து குளித்து மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று கொல்லிமலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
அங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி மற்றும் நம் அருவி ஆகியவற்றில் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும், பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோவில் மற்றும் எட்டுக்கை அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத்தொடர்ந்து செம்மேட்டில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீக்குப்பாறைப்பட்டி காட்சி முனையம், தாவரவியல் பூங்கா ஆகியவற்றை சுற்றி பார்த்த பயணிகள், வாசலூர்பட்டி ஏரியில் படகு சவாரி செய்தும் பொழுதை கழித்தனர்.
இதேபோல், கொல்லிமலையின் தெற்கு அடிவாரத்தில் திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள புளியஞ்சோலை கிராமத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொல்லிமலையில் இருந்து வரும் மூலிகை குணம் கொண்ட ஆற்று நீரில் குளிப்பதற்காக திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பயணிகள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
வார விடுமுறை என்பதால் நேற்று காலை முதலே புளியஞ்சோலை ஆற்றில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து, ஆர்ப்பரித்து ஓடும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.