‘சென்னை ஒன்று’ செயலிக்கு வரவேற்பு - 1 லட்சம் பேர் பதிவிறக்கம்

டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது.
‘சென்னை ஒன்று’ செயலிக்கு வரவேற்பு - 1 லட்சம் பேர் பதிவிறக்கம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் (கும்டா) 2-வது ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை பெருநகர பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த கியூ.ஆர். பயணச்சீட்டு மற்றும் பயணத்திட்டமிடல் செயலியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்துகளையும் இணைக்கும் வகையில் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் செயல்படக்கூடிய சென்னை ஒன்று (சென்னை ஒன்) செல்போன் செயலி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த செயலி பஸ், மின்சார ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் டாக்சி, ஆட்டோக்களை ஒரே கியூ.ஆர். பயணச்சீட்டு மூலம் ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் பொதுமக்கள் பஸ்கள், மெட்ரோ மற்றும் மின்சார ரெயில்களின் நிகழ்நேர இயக்கங்களை அறிந்து கொள்ளவும், யு.பி.ஐ. அல்லது கட்டண அட்டைகள் வழியாக பயணச்சீட்டுகளை பெற்றிடவும், ஒரே பயண பதிவின் மூலம் அனைத்து போக்குவரத்து முறைகளிலும் பயணம் செய்யவும் முடியும்.

சென்னை ஒன்று செயலி பொது போக்குவரத்து சேவையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். இனி பொதுமக்கள் பயணச்சீட்டு பெற வரிசையில் காத்திருக்க தேவையில்லை. இந்த செயலி மூலம் எளிதாக கட்டணம் செலுத்தி பயணச்சீட்டை பெற்று பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஒன் செயலிக்கு பொதுமக்கள் இடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சென்னை ஒன்' செயலியை ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளிலும் பயன்படுத்த முடியும். அதனால், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வழி செய்யப்பட்டு உள்ளது.

இதில், டிக்கெட்டிற்கு பணம் செலுத்த வசதியாக கும்டா யு.பி.ஐ. வசதியும் இருக்கிறது. அதனால் மற்ற யு.பி.ஐ. செயலிகள் தேவையில்லை. எனினும், மெட்ரோ, ரெயில் மற்றும் பஸ்சையும் இணைந்து டிக்கெட் எடுத்துவிட்டால், அதில் ஒன்றை ரத்து செய்ய முடியாது. பதிவு (புக்கிங்) செய்து விட்டால் ரத்து செய்ய முடியாது என்ற நிலை உள்ளது.

இதனால், சென்னை ஒன்று செயலியில், பல மேம்பட்ட அம்சங்கள் இருந்தபோதும் இன்னும் சிலவற்றை மேம்படுத்த வேண்டி உள்ளது. சென்னையில் உள்ள மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் பொது போக்குவரத்து சேவையை தினசரி பயன்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com