

புதுடெல்லி,
இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது பட்டமளிப்பு விழா ஆகியவை சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்த 2 நிகழ்ச்சிகளிலும் பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வந்திறங்கினார். விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் மந்திரிகள் பூங்கொத்துகள், ரோஜா பூ ஆகியவை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்துக்கு நரேந்திர மோடி செல்கிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில் பிரதமரின் ஹெலிகாப்டர் தரை இறங்கும்.
பின்னர் அங்கிருந்து ஐ.ஐ.டி. சென்னை ஆராய்ச்சி பூங்காவில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஹேக்கத்தான் தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
இதனைத்தொடர்ந்து சென்னை ஐ.ஐ.டி.யின் 56வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெறும் மாணவர்கள் செயல்பாட்டு அரங்கத்துக்கு நரேந்திர மோடி செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் அவர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, சிறப்புரையாற்றுகிறார். பிரதமர் மோடி 2வது முறையாக பதவியேற்ற பின்பு முதன்முறையாக சென்னை வந்துள்ளார்.