வெல்டிங் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி தெர்மல்நகர் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்த ஒருவர், அந்த கடையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெல்டிங் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி தெர்மல்நகர், கோவில்பிள்ளைநகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் பூங்காவனம் (வயது 51), அந்தப் பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தார். தொழில் நிமித்தமாக சென்னைக்கு சென்றிருந்த பூங்காவனம், கடந்த 24-ம் தேதி காலை ஊர் திரும்பியுள்ளார். அன்று மாலை, பூங்காவனத்தின் நண்பர் கெவின் என்பவர், பூங்காவனத்தின் மகன் சிலம்பரசனை தொடர்பு கொண்டு உடனடியாக கடைக்கு வருமாறு தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து கடைக்கு விரைந்து சென்ற சிலம்பரசன், அங்கு தனது தந்தை கடையின் முன்புறம் இருந்த இரும்பு குழாயில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உறவினர்கள் உதவியுடன் பூங்காவனத்தை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பூங்காவனம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பூங்காவனம் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்ஸி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com