

சென்னை,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் தலைமையில் இன்று (12.10.2026) சென்னை, அண்ணா நகர், தொழிலாளர் ஆணையரக கூட்ட அரங்கில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 100 பயனாளிகளுக்கு ரூ.42,21,900/- மதிப்பிலான உதவி தொகைகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உதவிகளை வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களால் வழங்கப்படும் விரிவான நலத்திட்டங்களில், திருமண உதவி, மகப்பேறு உதவி, குழந்தைகளின் கல்வி உதவி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கான உதவி, மாதாந்திர ஓய்வூதியம், இயற்கை மரண உதவி, பணியிட விபத்து மரண உதவி மற்றும் விபத்து ஊனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் 20 அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. மாவட்டந்தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மூலம் பதிவு, புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் 10.05.2026 முதல் 30.09.2026 வரை 3,53,840 தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்யப்பட்டு 6,88,674 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் ரூ.688,08,51,188/- உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5,88,296 ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் ரூ.1,200/- ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.
இவ்விழாவில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசு செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் வள்ளலார், மற்றும் கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.