

மக்கள் குறைதீர்கும் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 273 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
நலத்திட்ட உதவிகள்
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செங்கல்பட்டு வட்டம் சென்னேரி கிராமத்தை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் சார்பாக மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழாவில் பேச்சுப்போட்டி, கட்டுரைபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களைகளையும் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ் வழங்கினார்.
தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த நீரில் மூழ்கி இறந்த 2 நபர்களின் குடும்பங்களுக்கு வருவாய்த் துறையின் சார்பாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண தொகையிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
கூட்டத்தில், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாகிதா பர்வின், மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.