கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு நலவாரியம்
Published on

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

நல வாரியம்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளிகள், மறுவாழ்வு இல்லங்களில் பணியாற்றும் பணியாளர்கள், சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

சான்றிதழ்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்கு உட்பட்ட ரோமன் கத்தோலிக்க திருச்சபை பேராயர்கள் மற்றும் ஆயர்கள் பிராட்டஸ்டண்ட் திருச்சபையில் ஆயர்கள், பெந்தகோஸ்தே சர்ச்சுகள் போன்ற அங்கீகாரம் பெறப்பட்ட திருச்சபைகளில் இருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்காணும் திருச்சபைகள் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

கல்வி உதவித்தொகை

அதன் விவரம் வருமாறு:- 10-ம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற்கல்வி பட்டப்படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும். விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ. 1 லட்சம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் காயத்தின் தன்மைக்கு ஏற்ப உதவித்தொகை ரூ. 10,000 முதல் ரூ. 1 லட்சம் வரை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20,000, ஈம சடங்கு உதவித்தொகை ரூ. 5,000, திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ. 3,000 மற்றும் பெண்களுக்கு ரூ. 5,000.

மகப்பேறு உதவித்தொகை ரூ. 6,000 மற்றும் கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com