

சென்னை,
சென்னை மாநகரம் முழுவதும் பயன்படுத்தப்படாத இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்களில் தேங்கும் மழைநீரில் டெங்கு கொசு உருவாகின்றது. இதனால் மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
எனவே இந்த வாகனங்களை அப்புறப்படுத்தி, அவற்றை பொது ஏலம் விடவும், டெங்கு கொசு பரவலைத் தடுக்கவும் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞசர் ஏ.பி.சூரியபிரகாசம் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி தரப்பில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, கடந்த மார்ச் மற்றும் மே மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா இரண்டாவது அலை தணிந்துள்ள நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் மற்றும் இதுவரை எடுக்கப்பட நடவடிக்கைகளின் பலன் என்ன என்பது குறித்து சென்னை மாநகராட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.