திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்கள் நலனுக்காக செய்ய வேண்டிய வசதிகள் என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் பக்தர்கள் நலனுக்காக செய்ய வேண்டிய வசதிகள் என்ன? என்பது குறித்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பக்தர்கள் நலனுக்காக செய்ய வேண்டிய வசதிகள் என்ன?
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணியசாமி கோவில் நிர்வாகம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி, திரிசுதந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் மூலம் கோவில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கோவிலில் 26-3-2022 கூடுதல் ஆணையரால் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, கோவில் நலன் மற்றும் பக்தர்கள் நலன் கருதி ஏற்கனவே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.

அப்புறப்படுத்த நடவடிக்கை

கோவிலில் அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற விளம்பர பலகை எல்.இ.டி. போர்டில் பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வைக்கவும், கோவிலில் உள்ள திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஐகோர்ட்டு உத்தரவையும், ஆணையர் உத்தரவையும் முழுமையாக செயல்படுத்தவும், கோவிலுக்குள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வரிசைமுறை நீங்கலாக தேவையில்லாத இடங்களில் உள்ள மற்ற எஸ்.எஸ். வரிசை முறை அமைப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருவறைக்கு அருகில் உள்ள மகாமண்டபத்தில் தேவையின்றி உள்ள பித்தளை வரிசை முறை அமைப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும், பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவர் குடிலுக்கு அருகிலும் மற்றும் ரூ.100 டிக்கெட் கவுண்ட்டருக்கு அருகிலும் மொபைல் டாய்லெட்டுகள் அமைக்க ஆகம விதிகளுக்கு உட்பட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

பால் அபிஷேகம்

கோவிலில் மூலவருக்கு மூன்று காலங்களிலும் நடைபெறும் அபிஷேகத்தின்போது பக்தர்கள் அனுமதிச் சீட்டு பெற்று அமர்ந்து தரிசனம் செய்யவும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

பிற கோவில்களில் உள்ளவாறு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமெனில் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கோவில் திட்டப்படி ஒரு அபிஷேகத்திற்கு 50 லிட்டர் பசும் பாலை கோவில் மூலமே கொள்முதல் செய்து அபிஷேகம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பாதுகாப்பு அறை

மகாமண்டபத்தில் தேங்காய் உடைக்கும் இடத்தை மாற்றி இரண்டாம் பிரகாரத்தில் பழைய உள்துறை அலுவலகம் அருகில் இடம் தேர்வு செய்து தேங்காய் உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவிலில் அன்னதானத்திற்காக தினந்தோறும் தேவைப்படும் சமையல் பொருட்களை அடுக்கி வைப்பதற்காக பலசரக்கு சாமான்கள் பாதுகாப்பு அறை உடனடியாக அமைக்கப்பட வேண்டும். பக்தர்கள் உணவருந்தி விட்டு வெளியேறும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள கை கழுவுவதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாய்கள் கூடுதலாக பொருத்தவும், முடிகாணிக்கை மண்டபத்தில் முடிகாணிக்கை செய்ய கட்டணம் கிடையாது என்ற வாசகம் பொருந்திய எல்.இ.டி. டிஜிட்டல் போர்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப்பட வேண்டும்.

நாழிக்கிணற்றில் நீராட கட்டணம் ரத்து

முடிகாணிக்கையின்போது பணியாளர்கள் பக்தர்களிடம் தொகை பெறுவதை கண்காணித்து தொகை பெறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு ரூ.1 கட்டணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கட்டணச்சீட்டை ரத்து செய்து பக்தர்களை இலவசமாக அனுமதிக்க ஆணையர் அனுமதி பெற்று செயல்பட வேண்டும் என்றும், பக்தர்கள் நீராடிவிட்டு விரைந்து செல்வதற்கு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.

கோவிலில் உள்ள யானை இயற்கை சூழலில் நடந்து செல்வதற்கேற்ப சரவணபொய்கை வளாகத்தில் மண் தரை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோவில் இணை ஆணையர்/ செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com