

சென்னை,
வடபழனி - பூந்தமல்லி இடையே புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயில் சேவைகளின் சிறப்புகள் வருமாறு:-
* பூந்தமல்லி - வடபழனி இடையே 14.64 கி.மீ. நீளம் கொண்ட மெட்ரோ ரெயில் சேவை இது. பயண நேரம் 40 நிமிடங்கள். மொத்தம் 11 ரெயில் நிலையங்கள் உள்ளன.
* போரூர் சந்திப்பு - வடபழனி இடையே 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த 7 மெட்ரோ நிலையங்களில் ரெயில் இப்போதைக்கு நிற்காது.
* மார்ச் மாதத்திற்கு மேல் அந்த நிலையங்கள் இயங்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த இடைப்பட்ட காலத்தில் பூந்தமல்லியில் புறப்படும் மெட்ரோ ரெயில், போரூர் சந்திப்பு வரை வந்து விட்டு, எங்கும் நிற்காமல் வடபழனிக்கு சென்றுவிடும்.
* தற்போதைய சூழ்நிலையில், போரூருக்கு பிறகு வடபழனியில்தான் ரெயில் நிற்கும். வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில், முதல் கட்ட திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வழியாக வெளியேற வேண்டும்.
* இந்த வழித்தடத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் 'பிளாட் பார்ம் ஸ்கிரீன் டோர்' என்ற 5.5 அடி கொண்ட தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது. பைலட் ரெயிலை ஓட்டும்போது பயணியாராவது பாதையில் விழுந்துவிட்டால் அவர் பிரேக் போட்டு ரெயிலை நிறுத்தி காப்பாற்றிவிடலாம்.
* 80 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படும். 4-ம் வழித்தடத்திற்கென்று 36 ரெயில்கள் உள்ளன. தற்போது 10 ரெயில்களை மட்டும் இயக்க திட்டம்.
* தொடக்கத்தில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில்கள் 3 பெட்டிகளை கொண்டதாக இருந்தாலும், 6 பெட்டிகளுடன் அவற்றை இயக்க முடியும். ஆனாலும் மூன்று மூன்று பெட்டிகளாக அவற்றை இயக்கும்போது ரெயில்களின் சேவை அதிகமாகும்.
* 4-ம் வழித்தடம், வடபழனி சந்திப்பு மெட்ரோ ரெயில் நிலையத்துடன் இணைக்கப்படுவதால், பயணிகள் அங்கு இறங்கி, ஏற்கனவே இயக்கத்தில் உள்ள வழித்தடம் 2-க்கு மாறி, எழும்பூர், சென்னை சென்டிரல், ஆலந்தூர் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களை எளிதாக சென்றடைய முடியும்.
* அத்துடன் சென்னை - ஸ்ரீபெரும்புதூர் தொழில்துறை வளாகத்தை எளிதில் சென்றடைய இவ்வழித்தடம் பெரிதும் உதவும். இவ்வழித்தடம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள், பொதுமக்களுக்கு பெரிதும் உதவும்.
* ஆளில்லா ரெயில் இயக்க வசதி, தானியங்கி ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தானியங்கி பாதுகாப்பு அமைப்பு, தகவல் தொடர்பு அடிப்படையிலான ரெயில் கட்டுப்பாடு, பயணிகள் பாதுகாப்பு கதவுகள் போன்ற புது அம்சங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளன.
* இத்திட்டத்தில் இரட்டை அடுக்கு மெட்ரோ பகுதி அமைந்துள்ளது. 4 மற்றும் 5-ம் வழித்தடங்களுக்கு இடையே ரெயில் மாறும் வசதியும் உள்ளது.