

சென்னை,
தமிழக சட்டசபையில் மொத்தம் 234 உறுப்பினர்கள் உள்ள னர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 164 (1ஏ) பிரிவின் படி, ஒரு மாநிலத்தில் முதல்-அமைச்சர் உள்பட அமைச்சர்களின் எண்ணிக்கை, சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதன்படி தமிழகத்தில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் வரை பதவியேற்கலாம்.
தற்போது முதல்-அமைச்சர் விஜய் உள்பட 10 பேர் மட்டுமே பதவியேற்றுள்ளதால், இன்னும் 25 பேருக்கு அமைச்சரவையில் இடம் வழங்க வாய்ப்பு உள்ளது. அதில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை என ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன.
இந்த நிலையில்,முதல்-அமைச்சர் மற்றும் 9 அமைச்சர்களுக்கும் நேற்று இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய்க்கு காவல்துறை, பெண்கள் நலன் உள்ளிட்ட துறைகளும், ஊரக வளர்ச்சித்துறை ஆனந்துக்கும், பொதுப்பணித்துறை ஆதவ் அர்ஜுனாவுக்கும், சுகாதாரம் அருண்ராஜுக்கும், செங்கோட்டையனுக்கு நிதித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு முக்கிய துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அந்த வகையில் வனம், வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள், சமூக நலன், மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், சுற்றுலா, கைத்தறி, வணிகவரி, போக்குவரத்து, இந்துசமய அறநிலையத்துறை, உயர் கல்வி, தகவல் தொழில்நுட்பம், சிறுபான்மையினர் நலன், தொழிலாளர் நலன், ஆதிதிராவிடர் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகள் இன்னும் ஒதுக்கப்படாமல் உள் ளன.
இந்த துறைகளும் இன்னும் சில நாட்களில் புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன. அதில் த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினருக்கும் அளிக்கப்பட உள்ளதாக த.வெ.க. வட்டாரத்தில் கூறப்பட்டது.