

சென்னை,
சென்னை கோவளத்தில் நேற்று நடந்த 2-வது முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் 66 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.58 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் விஜய் முன்னிலையில் பரிமாறப்பட்டன.
முக்கிய திட்டங்கள் என்னென்ன...?
* ஹூண்டாய் நிறுவனத்திற்கு உதிரிபாகங்கள் வழங்கும் வஷின் ஆட்டோமோட்டிவ் இந்தியா மற்றும் சியோயோன் ஆகிய இரு நிறுவனங்களும் ரூ.1,370 கோடி புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்க திட்டத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம். இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
* தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனம் ரூ.250 கோடி முதலீடு மற்றும் 200 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எக்கு பதப்படுத்துதல் திட்டம் அமைக்க உள்ளது.
* ராயல் என்பீல்டு நிறுவனம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன் முறையாக இருசக்கர மின்வாகன உற்பத்தியில் ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு. இதன் மூலம் 500 பேருக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* முன்னணி ஜவுளி நிறுவனங்களான ராம்ராஜ், எஸ்சிஎம், அவனீதா, கேபிஆர், அர்த்தநாரி. எல்.எஸ்.மில்ஸ் மற்றும் ஜி.எச்.சி.எல். ஆகியவை தங்களது உற்பத்தித் திறன் மற்றும் உள் நாட்டு பிராண்டுகளை விரிவுபடுத்த புரிந்துணர்வுஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
* தியாகராஜர் மில்ஸ் நிறுவனம், ஜெர்மனியின் யூரோ டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விருதுநகரில் ரூ.100 கோடி முதலீட்டில் பருத்தி ஜாக்கார்டு துணி உற்பத்தி ஆலையை அமைக்கவும், தொழில்நுட்ப ஜவுளித் துறையில் விரிவாக்கம் செய்யவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த 4 துறைகளில் மட்டும் ரூ.3.928 கோடி முதலீடு மற்றும் 14,650 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
* ஸ்வீடன் நாட்டின் பிஎம்சி ஹைட்ராலிக்ஸ் நிறுவனம், பெங்களூருவில் உள்ள தனது ஹைட்ராலிக் உபகரண உற்பத்தி பிரிவின் ஒரு பகுதியை தமிழ்நாட்டிற்கு மாற்றி, முதல் உற்பத்தி ஆலையை ரூ.300 கோடி முதலீடு மற்றும் 300 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகை யில், கிருஷ்ணகிரியில் அமைக்கவுள்ளது.
* ஜே.கே.பென்னர் நிறுவனம், ரூ.900 கோடி முதலீடு மற்றும் 1,650 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், சிவகங்கையில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது.
* பிரேசில் நாட்டின் வெக் நிறுவனம், தர்மபுரி மாவட்டத்தில், ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், உற்பத்தி ஆலையின் விரிவாக்கத்தை மேற்கொள்ளவுள்ளது.
* ரானா செமிகண்டக்டர் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.150 கோடி முதலீடு செய்யவுள்ளது.
* பல்முனை சரக்குப் போக்குவரத்துப் பூங்காக்கள் மற்றும் உலர் துறைமுகங்கள் மிக முக்கி யமான இடங்களில் நிறுவிடும் வகையில், பல்வேறு மாவட்டங்களில், ரூ.15,250 கோடி முதலீடு மற்றும் 8,375 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 12 பல்முனை சரக்குப் போக்குவரத் துப் பூங்காக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
* ரூ.125 கோடி முதலீடு மற்றும் 50 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதற்குமான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
* செட்டிநாடு ஏரோஸ்பேஸ் டெவலப்மெண்ட் அலையன்ஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள செட்டிநாடு ஏரோநாடுவில் பிரத்யேக டிரோன் தொழில்துறை மையம் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இது வாகும். டிரோன் உற்பத்தி, தொழில்நுட்ப மேம்பாடு. மாதிரி வடிவமைப்பு, சோதனை மற்றும் பயிற்சி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் இம்மையம் உருவாக்கப்பட உள்ளது.
* அமேசான் செல்லர் சர்வீசஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அமேசான் தளத்தில் புதிதாக விற்பனையாளர்களாகப் பதிவு செய்யும் தகுதியுடைய ஏற்றுமதியாளர்கள், 50 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பிலான சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளைப் பெற வாய்ப்புள்ளது.