ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் என்னென்ன..?

ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.176 கோடி திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ரூ.134.45 கோடி மதிப்பிலான 150 புதிய திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
இதனைத்தொடந்து ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை அறிவித்தார். அவை பின்வருமாறு:-
* ராமநாதபுர நகராட்சியின் தேசிய நெடுஞ்சாலை பகுதி ரூ.30 கோடி செலவில் 6 வழி சாலையாக தரம் உயர்த்தப்படும்.
* திருவாடனை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் உள்ள 16 கண்மாய்கள் ரூ.18 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
* கீழக்கரை வட்டத்தில் இருக்கும் 6 கண்மாய்கள் ரூ.4.65 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும். ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றியமைக்கப்படும்.
* கடலாடி வட்டம் - செல்வனூர் கண்மாய் ரூ.2.60 கோடியிலும், சிக்கல் கண்மாய் ரூ.2.30 கோடியிலும் மறுசீரமைக்கப்படும்.
* பரமக்குடி நகராட்சிக்கு ரூ.4.60 கோடி செலவில் புதிய அலுவலக கட்டிடம், கமுதியில் ரூ.1 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
* கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டிடம், ரூ.1.5 கோடியில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும்.
தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிதிப்பகிர்விலும் ஓரவஞ்சணை, பள்ளிக் கல்வி திட்டத்திற்கும் நிதி தரமாட்டார்கள், பிரதமரின் பெயரால் உள்ள திட்டங்களுக்கும் நாம்தான் படியளக்க வேண்டும். தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே ஒன்றிய பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்கச்சத்தீவை தரமாட்டோம் என இலங்கை மந்திரி கூறுகிறார். இதற்கு இந்திய வெளியுறவு மந்திரி கண்டனம் தெரிவித்திருக்க வேண்டாமா? தமிழ்நாடு மீனவர்கள் என்றாலே பாஜக அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. நமது மீனவர்களை காக்க மத்திய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்குவதில்லை. ஜிஎஸ்டி, நிதிபகிர்வு உள்ளிட்டவற்றில் மத்திய அரசு, தமிழகத்துக்கு எதிராக செயல்படுகிறது. மாநில நலன்களை புறக்கணித்து மாநில உரிமைகளை பறிக்கிறது. மணிப்பூருக்கு குழு அனுப்பாத பாஜக அரசு, கரூருக்கு குழூ அனுப்புவது ஏன்? தமிழகத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் மத்திய அரசு குழு அனுப்புகிறது. தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ள யாரும் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக வளர்த்தெடுக்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வேன்” என்று அவர் கூறினார்.
இவ்வாறு அவர் பேசினார்.






