பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் என்ன? - கல்வித்துறை விளக்கம்

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

2026-27-ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

* பள்ளி வளாகம், அனைத்து வகுப்பறைகள், சமையலறை, கழிவறைகள், தலைமை ஆசிரியர் அறை, குடிநீர் தேக்கத் தொட்டி மற்றும் கை கழுவும் இடம் ஆகிய இடங்கள் தூய்மையாகவும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* பள்ளியின் பெயர் பலகை தொலைவில் இருந்து பார்க்கப்படும்போது பொதுமக்களின் பார்வைக்கு நன்கு புலப்படும் வகையில் வர்ணப்பூச்சுகளை கொண்டு எழுதப்பட்டிருக்க வேண்டும்.

* ஸ்மார்ட் வகுப்பறைகள், ஹைடெக் ஆய்வகங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள், டேப்லெட் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

* 2026-27-ம் கல்வியாண்டுக்கான விலையில்லா நலத்திட்டங்கள், பள்ளி மாணவர்கள் அனைவரும் உரிய வகையில் உரிய நேரத்தில் கிடைப்பதற்கு சரியான திட்டம் வகுத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

* அரசு பள்ளிகளில் கிடைக்கும் தரமான கல்வி, வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள், விலையில்லா நலத்திட்டங்கள் குறித்த விவரங்களை பள்ளி வளாகம் அருகில் விளம்பரப்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சீருடை தையல் பணிகள், விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் நோட்டுப்புத்தகம் அச்சிடும் பணிகள் முடிவடைந்து வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை அச்சிடப்பட்ட இலவச நோட்டுப்புத்தகங்கள் மாவட்டங்களுக்கு 92.18 சதவீதமும், பாடப்புத்தகங்கள் 100 சதவீதமும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இலவச சீருடைகள் 95 சதவீதம் தையல் பணிகள் நிறைவு பெற்று 71 சதவீதம் வினியோகம் முடிவடைந்திருக்கிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com