பச்சை நிறத்திற்கு மாறிய பாம்பன் கடல் காரணம் என்ன? விஞ்ஞானி விளக்கம்

பாம்பன் கடலின் ஒரு பகுதி நேற்று நிறம் மாறி பச்சை நிறமாக மாறியது. அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானி விளக்கம் அளித்தார்.
பச்சை நிறத்திற்கு மாறிய பாம்பன் கடல் காரணம் என்ன? விஞ்ஞானி விளக்கம்
Published on

பச்சையாக மாறிய கடல்நீர்

ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கடல் பகுதியில் கடந்த ஒன்றிரண்டு நாட்களாக கடலின் நிறத்தில் மாறுபாடு காணப்பட்டது. அதிலும் நேற்று கடலின் நிறம் மாறி, பச்சையாக பாசி படர்ந்தது போல் காணப்பட்டது.குறிப்பாக பாம்பன் ரோடு பாலம் மற்றும் ரெயில் பாலத்தை ஒட்டிய கரையோரத்திலும், படகுகள் நிறுத்தப்படும் பகுதியிலும் விந்தையான இந்த காட்சியை காண முடிந்தது. இதனை சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆச்சரியத்தோடு பார்த்தனர்.

விஞ்ஞானி விளக்கம்

இதற்கான காரணம் குறித்து மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய தலைமை விஞ்ஞானி ஜெயக்குமார் கூறியதாவது:-

ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையில் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் நாட்டிலூகா என்று சொல்லக்கூடிய ஒரு வகையான பச்சைப்பாசிகள் கடலில் படரும். இந்த பாசிகள் காற்றின் வேகத்தால் அப்படியே கரை ஒதுங்கி அழிந்துவிடும். அதேநேரத்தில் காற்றின் வேகம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இந்த பாசிகள் கடல் நீர் முழுவதும் படர்ந்து குறிப்பாக கரையோரத்தில் உள்ள கடல் பகுதியை பச்சை நிறமாக்கிவிடும்..

இந்த பாசிகள் படர்ந்து இருக்கும்போது அஞ்சாலை உள்ளிட்ட சிலவகை மீன்கள் தங்காது. அனைத்து மீன்களும் அங்கிருந்து இடம் பெயர்ந்து ஆழ்கடல் பகுதியை நோக்கி சென்றுவிடும். கடந்த 2 நாட்களாகவே பாம்பன் குந்துகால் முதல் உச்சிப்புளி புதுமடம் வரையிலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடலில் பச்சை பாசிகள் படர்ந்து நிறம் மாறி காட்சி அளித்து வருகிறது.

பாதிப்பு இல்லை

வழக்கமாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில்தான் இந்த பச்சைப் பாசிகள் படர்ந்து வரும். ஆனால் இந்த முறை பாக் ஜலசந்தி கடல் பகுதியிலும் பச்சைப் பாசிகள் அதிக அளவில் படர்ந்து, கடல் நீர் நிறம் மாறியுள்ளது. எனவே மீன்களை வாங்குபவர்கள் நன்கு கழுவி சுத்தப்படுத்தி சாப்பிட வேண்டும். காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் இந்த பாசிகள் அனைத்தும் கரை ஒதுங்கி அழிந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com