

சென்னை,
நகராட்சி நிர்வாக இயக்குனரகத்தில் இருந்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கொரோனா தடுப்பு பணியின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு முன்கள பணியாளர்களின் குடும்பத்துக்கு கருணை தொகையாக ரூ.25 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்குவதற்கு ஏதுவாக கீழ்கண்ட நிபந்தனைகள், விவரங்கள் உறுதி செய்வதுடன், அந்த விவரங்களை உடனே அரசுக்கு அனுப்ப வேண்டும்.
அதன் விவரம் வருமாறு:-
* கொரோனா நோய்தொற்று தடுப்பு பணியில் பணிபுரிய செயல்முறை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தால் அதன் நகல்.
* கொரோனா நோய் தடுப்பு பணியில் பணிபுரிந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டது என்பதற்கான துறை தலைவர், அலுவலக தலைவரின் சான்று.
* கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான மருத்துவச்சான்று (இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்பட வேண்டும்).
* கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளராக பணிபுரிந்தாரா என்பதற்கான சான்று.
* கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டார் அல்லது முன்கள பணியாளராக பணிபுரிந்தார் என சான்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளதா? என்பதையும், கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியின்போது கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
* இறப்பு சான்று நகல்.
* வாரிசுதாரர் சான்றிதழ் நகல்.
* சான்றொப்பமிட்ட அசல் படிவங்கள்.
* நிரந்தர பணியாளர் என்றால் பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நாள், பணி நிரந்தரம் செய்யப்பட்ட விவரம், தற்காலிக பணியாளர் என்றால் பணியில் சேர்ந்த நாள் மற்றும் அதன் விவரம்.
* வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ள நிபந்தனைகள் பூர்த்தி செய்துள்ளாரா? என்ற விவரம்.
* துறை தலைவர், அலுவலக தலைவரின் ஒப்புதல்.
மேற்கண்ட விவரங்களை சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் கமிஷனருக்கு அனுப்பி வைத்து உரிய ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்குமாறு கோரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.