சங்கேத வார்த்தையில் பேசியது என்ன? நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் தீவிர விசாரணை

சங்கேத வார்த்தைக்கும் போதைப்பொருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தமிழ் திரயுலகின் முன்னணி நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீகாந்த், சிறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீகாந்த் சொன்ன தகவல் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளார். கேரளாவில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்ட நடிகர் கிருஷ்ணா,நேற்று போலீசார் முன்பு ஆஜரானர். இதையடுத்து, கிருஷ்ணாவிடம் நேற்று முதல் தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
ஒருபக்கம் விசாரணை நடந்து கொண்டு இருக்கும் போதே, மற்றொரு பக்கம் பெசண்ட் நகரில் உள்ள கிருஷ்ணாவின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். உயர் ரக போதைப்பொருள் பயன்படுத்தும் அளவுக்கு தனது உடல் ஒத்துழைக்காது எனவும் இரப்பை பிரச்சினைகள் இருப்பதாகவும் போலீசாரிடம் கிருஷ்ணா கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே, நடிகர் கிருஷ்ணா தனது நண்பர்களிடம் சங்கேத வார்த்தைகளில் (Code word) பேசியதாக சொல்லப்படுகிறது.
நடிகர் கிருஷ்ணாவின் செல்போனில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சங்கேத வார்த்தைகளின் அர்த்தம் என்ன? அதற்கும் போதைப்பொருளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.