அறிவாலயத்து அதிகாரம் என்ன செய்கிறது? - தவெக கேள்வி

கல்வி பயிலும் புனிதமான வளாகங்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லாதது வேதனைக்குரியது என தெரிவித்துள்ளார்.
அறிவாலயத்து அதிகாரம் என்ன செய்கிறது? - தவெக கேள்வி
Published on

சென்னை,

தவெக கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே 22 வயது இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. தரமணியில் ஒரு குடும்பமே சிதைக்கப்பட்ட சம்பவத்தின் ரணம் ஆறுவதற்குள், தலைநகரின் மையப்பகுதியில் அடுத்த கொடூரம் அரங்கேறியிருப்பது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு தோல்வியையே காட்டுகிறது.
"விடியல் தருகிறோம்" என்று வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுகவின் இந்த நிர்வாகத்தில், கல்வி பயிலும் புனிதமான வளாகங்களுக்குக் கூடப் பாதுகாப்பு இல்லாதது பெரும் வேதனைக்குரியது.

அரசு நிறுவனங்களின் மூக்கிற்கு அடியிலேயே இத்தகைய குற்றங்கள் துணிச்சலாக நடத்தப்படுவது, குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ அல்லது காவல்துறையின் மீதோ எவ்வித அச்சமும் இல்லை என்பதையே காட்டுகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக வெற்று விளம்பரங்களில் கோடிக்கணக்கில் செலவு செய்யும் இந்த அரசு, களத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிவிட்டது.

குறிப்பாக, அரசு கல்லூரிகளில் முறையான கண்காணிப்பு கேமராக்களோ அல்லது தகுந்த பாதுகாப்பு ஊழியர்களோ இல்லாதது இந்த நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே அம்பலப்படுத்துகிறது.எனவே, இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் நடவடிக்கை எடுத்துக் கடுமையான தண்டனை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கல்வி நிறுவனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் 24 மணி நேரப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.முதல்-அமைச்சர் அவர்களே!!! அறிவாலயத்து அதிகாரம் என்ன செய்கிறது? - உங்கள் ஆட்சிச் சக்கரம் யாருக்காகச் சுழல்கிறது? வாக்குக்கு ஒரு நீதி, வாழ்க்கைக்கு ஒரு நீதியா? உங்கள் ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com