அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் நடந்தது என்ன..? - நெல்லை காவல்துறை விளக்கம்

பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் நடந்தது என்ன..? - நெல்லை காவல்துறை விளக்கம்
Published on

நெல்லை,

அய்யா வைகுண்டர் தர்மபதி கோவில் வளாகத்தில் பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாநகர காவல்துறை பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் வராத சொக்கலிங்கசாமி கோவில் தெருவில் அய்யா வைகுண்டர் தர்மபதி கோயில் அமைந்துள்ளது. இந்த தர்மபதி கோவில் வளாகத்தில் சமையல் செய்வது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை தொடர்பாக, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்றுள்ளது.

அதன் தொடர்ச்சியாக உரிய கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மாதம் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை இருதரப்பும் ஏற்று எழுத்து பூர்வமாக ஒப்புகை கொடுத்துள்ளனர். இந்நிலையில் உரிமையியல் பிரச்சினை உள்ள இடத்தில் கோர்ட்டை அணுகாமல், ஒரு தரப்பினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் உள்நுழைந்து அடுப்பினை தீ மூட்ட முற்பட்டுள்ளனர்.

இதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், இதை முறையாக பாளையங்கோட்டை காவல்துறையினர் தடுத்து உரிய சிவில் கோர்ட்டில் நிவாரணம் தேட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாநகர காவல்துறையினரின் நடவடிக்கை கண்ணியமாகவும், நடுநிலைமையுடனும் கையாளப்பட்டுள்ளது. தற்போது இரு தரப்பும் அமைதியான முறையில் வழிபாட்டை சிறப்பாக தொடர்கிறார்கள்

ஆனால், சமூக வலைதளங்களில் காவல் துறை அராஜகம் எனவும், அன்னதானம் நிறுத்தப்பட்டதாகவும் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பானது

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com