எலி மருந்து சாப்பிட்ட நோயாளிக்கு நடந்த கொடுமை... குளுக்கோஸ் பாட்டிலில் தண்ணீர் ஊற்றியதாக புகார்!

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுகாதார பணியாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார பணியாளர் பணியிடை நீக்கம்
Published on

திருவள்ளூர்,

எலி மருந்து சாப்பிட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு, சோடியம் குளோரைடு திரவத்துக்கு பதிலாக குழாய் தண்ணீரை குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றி சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ் என்பவர் குடும்பத் தகராறு காரணமாக எலி மருந்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தவறான முறையில் சிகிச்சை

அங்கு நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்காக மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மூக்கு வழியாக குழாய் செலுத்தி சலைன் திரவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது செவிலியருக்கு பதிலாக சிகிச்சையில் ஈடுபட்டதாக கூறப்படும் சுகாதாரப் பணியாளர் ஒருவர், சோடியம் குளோரைடு திரவத்துக்கு பதிலாக மருத்துவமனையில் உள்ள குழாயில் இருந்து தண்ணீரை பிடித்து வந்து குளுக்கோஸ் பாட்டிலில் ஊற்றியதாக புகார் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை நோயாளியுடன் இருந்த நண்பர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வேகமாக பரவியதை தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

பணி நீக்கம்

இதையடுத்து, மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டது எப்படி, அவரை அதற்கு அனுமதித்தது யார், மருத்துவமனை நிர்வாகத்தின் கண்காணிப்பில் அலட்சியம் ஏற்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சுகாதாரப் பணியாளர், மருத்துவமனை தலைவர் உத்தரவின் பேரில் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com