மதுரைக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
மதுரைக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
Published on

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை போட்டு மறைக்க முயன்றதை போன்று தான், வெற்று விளம்பரங்களால் 4 ஆண்டுகால அலங்கோல ஆட்சியின் அவலங்களை மறைக்க முயல்கிறது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. சங்கம் வளர்த்து தமிழுக்கு பெயர் தந்த மதுரையை, தமிழ்நாட்டின் இரண்டாவது மாநகராட்சியை, கல்லும் மண்ணுமான தரமற்ற சாலைகள், முறையற்ற சாக்கடை வடிகால் என அடிப்படை வசதிகள் கூட இல்லாத குப்பை மாநகராட்சியாக மாற்றி, கற்காலத்திற்கே கொண்டு சென்றதே ஸ்டாலின் அரசின் சாதனை.

நீங்கள் வாக்குறுதி அளித்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?... போட்டித் தேர்வுகள் மையம் எங்கே?... தொழில் வழித் தடம் எங்கே?... வர்த்தக மையம் எங்கே?... மதுரை மெட்ரோ எங்கே?... மதுரைக்கு சொன்ன எதேனும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றினீர்களா?. உங்கள் அப்பா பெயர் (கருணாந்தி) விளம்பரத்துக்காக ஒரு நூலகம் அமைத்ததை மட்டும் வைத்துக்கொண்டு, இது தான் சாதனை எனில், மதுரை மக்களுக்கு இதை விட பெரும் சோதனை என்ன இருக்கப் போகிறது?.

பந்தல்குடி கால்வாயை திரை போட்டு மறைத்ததே வெட்கக்கேடான செயல். அதை விட, Damage Control என்ற பெயரில் முதல்-அமைச்சர் கையை காட்டிக்கொண்டு போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வேடிக்கையின் உச்சம். போட்டோ ஷூட் தவிர வேறு எதுவுமே உங்களுக்கு தெரியாதா முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?. இத்தனை கேள்விகளுக்கு இடையே, பொதுக்குழு நடத்துகிறேன் என மதுரைக்கு வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்கூச்சப் பட்டிருக்க வேண்டும். ஆனால் அவரா? போட்டோ ஷூட் என்றால் முழு ஒப்பனை (Full Make-up) உடன் வந்திடுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com