திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவை கல்தான்: தமிழ்நாடு அரசின் மறு சீராய்வு மனுவில் தகவல்

திருப்பரங்குன்றம் மலை என்பது 'சிக்கந்தர் நில அளவீட்டு மையம்' என குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றத்தில் இருப்பது நில அளவை கல்தான்: தமிழ்நாடு அரசின் மறு சீராய்வு மனுவில் தகவல்
Published on: 

சென்னை,

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூண் என்பது நில அளவை கல்தான் என்று தமிழ்நாடு அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை

கார்த்திகை தீபத்திருவிழாவின்போது கோவில்களில் தீபம் ஏற்றப்படுவது மரபாக உள்ளது. இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மதுரை ஐகோர்ட்டில் இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் மற்றும் மேலும் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி, தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனால், அந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி 6-ந்தேதி தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய் தது. மலை உச்சியில் உள்ள தூண் நில அளவைக்கல் என்றும், பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு நடைமுறைகளில் மாற்றம் செய்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஒரு நாள் ஏற்ற அனுமதி

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரவிந்த்குமார், வி.எம்.பஞ்சோலி அமர்வு கடந்த 20-ந்தேதி முக்கிய இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வரும் 24-ந்தேதி (அதாவது நாளை) கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கடும் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

இதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு நேற்று முன்தினம் சுப்ரீம்கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த சீராய்வு மனுவிற்கு அடிப்படையாக தமிழ்நாடு அரசு சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் பல்வேறு முக்கிய வரலாற்று மற்றும் அறிவியல் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. திருப்பரங்குன்ற மலைமேல் உள்ளது நில அளவை கல்தான். தமிழகத்தில் மொத்தமாக இதேபோல் 800 நில அளவை தூண்கள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கந்தர் நில அளவீட்டு மையம்

குறிப்பாக, ஆங்கிலேயர் காலத்து நில அளவீட்டு ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்பது 'சிக்கந்தர் நில அளவீட்டு மையம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் மலையிலிருந்து நாகமலை, சதுரகிரி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெருமாள் மலை உள்ளிட்ட 7 நில அளவீட்டு மையங்களுக்கான திசைக்கோணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது. மேலும் அதில், ஆங்கிலேயர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட அளவீடுகளும், தற்போது நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகளும் துல்லியமாக ஒத்துப்போவதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்காக டி.ஜி.பி.எஸ் தொழில்நுட்பம், டிரோன் ஆய்வு, வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை ஆதாரங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

மையப்புள்ளி அடையாளங்கள்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சர்ச்சைக்குரிய கல்தூண் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள வட்டம் மற்றும் மையப்புள்ளி அடையாளங்கள் அனைத்துமே நில அளவீட்டுப் பணிகளுடன் தொடர்புடையவை என்று தமிழ்நாடு அரசு தனது சீராய்வு மனுவில் விளக்கி உள்ளது.

ஆகவே, திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள அந்த கல்தூண் என்பது நில அளவீட்டு தூண்தான் என்பதை நிரூபிப்பதற்கான முழுமையான அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்வு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம்கோர்டில் கோரிக்கை விடுத்துள்ளது.

X