எடப்பாடி மீது அதிருப்தி... என்ன சொல்லப்போகிறார் செங்கோட்டையன்...? - பரபரக்கும் அரசியல் களம்

செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான இவருக்கும், கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது.
இதற்கிடையே கடந்த 1-ந் தேதி கோபி அருகே நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5-ந் தேதி (அதாவது இன்று) கோபியில் உள்ள புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார்.
அதன்படி, கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கோபி கரட்டூர் ரோட்டில் உள்ள கோபி புறநகர் மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு நிருபர்களுக்கு பேட்டி அளிக்க உள்ளார். இதையொட்டி அங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கூட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்காக ஈரோட்டில் இருந்து முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் நேற்று இரவு குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு சென்றார். அப்போது சுமார் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கே.வி.ராமலிங்கம் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
என்ன சொல்லப்போகிறார்?
முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., கட்சி தலைமையான எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியை கொட்டி தீர்க்க போகிறாரா? கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைப்பது குறித்து மனம் திறந்து பேச போகிறாரா? பா.ஜனதா கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்த்தது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பேச போகிறாரா? அல்லது அ.தி.மு.க.வில் இருந்து விலக போகிறாரா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்று பதில் கிடைத்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






