நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
நிதி நிறுவனங்கள் மீதான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் செயல்பட்டு வந்த ஆருத்ரா, ஹிஜாவு, எல்.என்.எஸ். உட்பட பல நிதி நிறுவனங்கள், பணத்தை முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் 5 முதல் 15 சதவிகிதம் வட்டி தருவதாக கூறி சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாயை வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் வெளி நாட்டிற்கு சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்தது தொடர்பாக புகார் தெரிவித்ததோடு,அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, திருவண்ணாமலையை சேர்ந்த ரமேஷ் லட்சுமிபதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று மோசடி செய்ததாக புகாருக்குள்ளான நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் வழக்குகள் விசாரிக்கபட வேண்டுமென கோரிக்கையை வைத்துள்ளார். இதுமட்டுமின்றி மக்களை ஏமாற்றிய முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய, தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று வந்தது. அப்போது இதுபோன்ற முதலீட்டு நிறுவனங்கள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து விரிவான மனுவை தாக்கல் செய்யும்படி மனுதாரர் தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com