

சென்னை
சென்னை துறைமுகத்தில் திடீரென இன்று காலை வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் சாலையெங்கும் புகைமூட்டம் காணப்படுகிறது. அது காற்றில் விரைவாக பரவி பொதுமக்களுக்கும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் மூச்சு திணறல், இருமல், குமட்டல், கண், உடல் எரிச்சல் ஏற்பட்டு உள்ளது. கப்பலில் இருந்து சல்பேட் வாயு கசிந்துள்ளது என்றும் தீ விபத்து எதுவும் இல்லை என்றும் தகவல் தெரிவிக்கின்றது.
இதனால், தலைமைச்செயலகம் உள்ளேயும் அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, துறைமுகத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் அழைத்து செல்லப்படுகின்றனர். ரசாயன பொடிகளை தூவி அதனை தணிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
திடீர் வாயு கசிவால், பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது. சுவாசிக்கவும் அவதிப்படுகின்றனர். பட்டாசு மருந்துபோன்று நெடி ஏற்பட்டு உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கான காரணம் என்ன? என்பது பற்றி துறைமுகம் சார்பில் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை துறைமுகத்தில் உள்ள கன்டெய்னரில் இருந்த சல்பேட் காற்றில் கசிந்துள்ளது. கடும் வெப்பம் ஏற்படுத்திய தாக்கத்தினால் வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. விதிமீறல்கள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். சல்பேட் வேதியியல் மாற்றம் அடைந்து வெண் புகையாக காற்றில் கலந்துள்ளது. காற்றில் வாயு கலவை கலந்திருப்பது உறுதியாகி உள்ளது.
இதனால் மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. சல்பரில் இருந்து புகைதான் வந்தது. தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது என்று தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. வாயு கசிவால், தலைமை செயலகத்திற்கு எதிரே இருந்த பொதுமக்களும் அவதியடைந்தனர்.
தீயணைப்பு துறை உடனடியாக சென்று அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாயு கசிவால், காற்றில் அம்மோனியா மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு உள்ளிட்ட ரசாயனங்கள் கலந்துள்ளன என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. எனினும், காற்றின் தரக்குறியீடு 68 என்ற அளவில் நல்ல முறையிலேயே உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.