

சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை மத்திய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை மந்திரி முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து விமான நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய விமான நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை மத்திய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய்க்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?
ஆகவே, பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.