கரூர் துயரத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன...? - தீர்வுதான் என்ன...?


கரூர் துயரத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன...? - தீர்வுதான் என்ன...?
x
தினத்தந்தி 30 Sept 2025 9:04 AM IST (Updated: 30 Sept 2025 11:29 AM IST)
t-max-icont-min-icon

கரூர் துயரத்தில் இழந்த உயிர்கள் விலை மதிக்க முடியாதவை.

சென்னை,

கரூர் துயரம்:-

கரூர் துணி நெசவு சத்தம் கேட்டுக்கொண்டு இருந்த இந்த ஊரில் கடந்த சனிக்கிழமை (27.09.2025)முதல் எங்கு பார்த்தாலும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. அப்படி ஒரு பெரும் துயரச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 41 உயிர்கள் பரிதாபமாக போய்விட்டன. அதுவும் பள்ளிக்கூடத்தில் படிக்கும் சிறுவர், சிறுமிகளும் பலியாகி இருப்பதுதான் சோகத்தின் உச்சம். பறிபோன உயிர்கள் அனைத்தும் இயற்கை இடர்பாட்டால் அல்ல. பிரசார கூட்டத்துக்காக திரண்ட கூட்டம்.

அரசியல் கட்சி ஒன்றின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இத்தனை பேர் பலியாகி இருப்பது, இதுதான் முதல் முறை என்ற மோசமான முன்னுதாரணம் கரூர் சம்பவத்துக்கு கிடைத்து உள்ளது. இது பெருமைப்படத்தக்கதா?. பேரிடர் சம்பவங்களில் உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்புகள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே நெரிசலில் சிக்கி பலியாகும் சம்பவங்கள் நாட்டை அடுத்தடுத்து துயரத்தில் ஆழ்த்தின. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ந்தேதி ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து கும்பமேளாவுக்கு வருவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் ஏராளமானோர் திரண்டதால் ஏற்பட்ட திடீர் நெரிசலால் 18 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவங்களின் வடுக்கள் மறைந்து வந்த சூழ்நிலையில் தற்போது இந்த சோகம் நடந்துள்ளது. எத்தனையோ கனவுகளை சுமந்த உயிர்கள், காற்றில் கரைந்துபோய்விட்டன. அன்பிற்குரியவர்களின் இழப்பை சந்தித்தவர்களின் குடும்பத்துக்கு காலம்தான் உரிய மருந்தாகும்.

கற்க வேண்டிய பாடம் என்ன...?

நடக்கக்கூடாதது நடந்து விட்டது. இதற்கு ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லி எந்த பயனும் இல்லை. மாண்டவர்களும் மீண்டுவரப்போவது இல்லை. இனி இதுபோன்ற துயரங்கள் நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம் என்று அனைவரும் சிந்திக்க வேண்டும். பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. பொதுவாக இதுபோன்ற கூட்டங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

அதுவும் குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், இதய மற்றும் சுவாச நோய் உள்ளவர்கள் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இன்றைய நவீன உலகில், உள்ளங்கையில் தகவல்கள் உள்ளன. அனைவரிடமும் செல்போன்கள் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் நேரலை உள்ளது. அவற்றில் அந்த நிகழ்ச்சிகளை பார்க்கலாம். இதுதான் மக்கள் முதலில் கற்க வேண்டிய பாடம்.

தீர்வுதான் என்ன...?

மாநாடு, பொதுக்கூட்டம் அல்லாத முறைப்படுத்தப்படாத கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு உரிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு பலமுறை கூறியுள்ளது. இனி ஒரு உயிர் போகாமல் தடுப்பதற்கு இந்த சம்பவத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு உரிய வழிகாட்டு முறைகளை அரசு உருவாக்க வேண்டும். அது நல்ல தீர்வாக அமையும்.

அதே நேரம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும். தலைவர்கள் வரும்போதும் போகும்போதும் அவர்களுடனே இருசக்கர வாகனங்களில் வலம் வருவது. ‘கெத்து’ காட்டுகிறேன் என்ற பெயரில் ஆபத்தான முறைகளில் கட்டிடங்களிலோ, மரங்களிலோ ஏறிநின்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.

இதில் முக்கியமானது வதந்தி... யாரோ ஒருவர் பொறுப்பற்ற முறையில் கிளப்பி விடும் வதந்தியும், திடீர் நெரிசலுக்கு காரணமாவது உண்டு. அதேபோல் ஒரு துயர சம்பவம் நடந்த பின்னர், அந்த சம்பவத்தை வைத்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் கற்பனை கதைகளை நம்பக்கூடாது. இதுபோன்றவற்றில் போலீசார் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் மக்கள் கூட்டத்தை திரட்டவும், அதை சென்று பார்ப்பதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் உயிர், அனைவருக்கும் முக்கியம். அதை நாம்தான் உணர்ந்து செயல்பட வேண்டும்.

நெரிசல் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு...?

கரூர் மாவட்டத்தில் விஜய்யின் அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் பல உயிர்கள் பலியானது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் ‘இதற்கு யார் பொறுப்பு?’ என்ற கேள்வி சமூகத்தில் எழுந்துள்ளது.

இந்திய அரசியலமைப்பில் இதற்கு தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன. நெரிசலால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விசாரித்த பல வழக்குகளில், யார் பொறுப்பு? என்பதற்கான பதிலை சுப்ரீம் கோர்ட்டு மற்றும் கோர்ட்டுகள் தெளிவாக கூறியுள்ளன.

அரசியலமைப்பு, சுப்ரீம் கோர்ட்டு கூறும் வழிகாட்டுதல்:-

அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (பி)-ன்படி மக்கள் அமைதியாகவும், ஆயுதம் இன்றியும் கூட முழு உரிமை அளிக்கிறது. இது அரசியல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அனைத்துக்கும் அடிப்படை ஆதாரம். ஆனால் இந்த உரிமை முழுமையானது அல்ல. பிரிவு 19 (3)-ன்படி அரசுக்கு ‘பொது ஒழுங்கு, நாட்டின் சுயாட்சி மற்றும் ஒற்றுமையை காக்க’ நியாயமான கட்டுப்பாடுகளை விதிக்கும் அதிகாரம் அளிக்கிறது.

அதன்படி கூட்டம் நடத்துவதற்கு மக்களுக்கு முழு உரிமை இருக்கும் அதேவேளையில், அதில் கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு முழு அதிகாரங்கள் உள்ளன. ஏற்கனவே மந்தர்தேவி, நைனா தேவி கோவில்களில் ஏற்பட்ட நெரிசல் வழக்குகளில் கோர்ட்டுகள் தெளிவான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. அந்த தீர்ப்புகளின்படி, கூட்டம் நடத்தும் நிர்வாகிகள் கூட்ட மேலாண்மை, மக்கள் வந்து செல்லும் பாதைகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல அரசு மற்றும் போலீசார் போக்குவரத்து மேலாண்மை, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு திட்டம், அவசர மருத்துவ உதவி போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். இதனால், நெரிசல் மரணத்திற்கான முழுப்பொறுப்பு அரசின் மீதோ அல்லது நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதோ விழுந்துவிடாது. அதில் இருவரும் சரிபங்கு பொறுப்பு கொண்டவர்கள்.

மேலும், நெரிசலால் ஏற்படும் மரணங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அதோடு கூட்ட மேலாண்மை செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. கூட்டம் நடத்தியவர்கள் மீது தவறு உறுதி செய்யப்பட்டால், மக்களுக்கு கொடுத்த நிவாரணத்தொகையை கூட்டம் நடத்தியவர்களிடம் இருந்து வசூல் செய்யலாம்.

அதுதவிர கும்பமேளா நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த கோர்ட்டு, நெரிசல் உயிரிழப்பு என்பது தடுக்கக்கூடிய பேரழிவு. அரசியலமைப்பின் பிரிவு 21-ன் அடிப்படையில், “பொது பாதுகாப்பு என்பது அரசின் தர்மம் அல்ல, அது அரசியலமைப்பு கடமை” என்று அரசுக்கு அறிவுறுத்தியது. அதேவேளையில் நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக பல்வேறு கோர்ட்டுகளில் மக்களுக்கும் அதில் பொறுப்பு உண்டு என்பது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதாவது அரசியலமைப்பின் பிரிவு 51ஏ-ன்படி குடிமக்களின் அடிப்படை கடமையாக நாட்டின் ஒற்றுமையை காப்பதும், ஒழுங்கை பேணுவதும் ஆகும். எனவே கூட்டங்களில், ‘ஒழுங்காக நடந்து கொள்வது மக்கள் கடமையாகும். அரசு உத்தரவை மதிக்க வேண்டும். பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்' என்றும் தெளிவுப்படுத்தியது.

இதனால், நெரிசல் பேரிடர்களை தடுப்பதில் அரசு, அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் மக்களுக்கும் அதில் பங்கு இருக்கிறது என்பது தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. கரூர் சம்பவத்திற்கு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டு இருந்தாலும் அதுகுறித்த உண்மை நிலை, முழுமையான விசாரணைக்கு பிறகே தெரிய வரும். இருந்தாலும் இந்த சம்பவத்தில் அனைத்து மட்டத்திலும் சட்டங்கள் மீறப்பட்டு உள்ளன.

எனவே அதன் பொறுப்பு அனைவருக்கும்தான். இருந்தாலும் இது நம் அனைவருக்கும் ஒரு படிப்பினை. இழந்த உயிர்கள் விலை மதிக்க முடியாதவை. எனவே அரசு, அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இதுபோன்ற ஒரு பேரழிவுகள் எப்போதும் நடக்காத வகையில் செயல்பட வேண்டும்.

இந்த ஆண்டு துயர சம்பவங்கள்:-

ஜனவரி 8 - திருப்பதியில் வரிசையில் நின்ற 6 பேர் பலி.

ஜனவரி 29 - பிரயாக்ராஜ் மகாமகத்தில் 37 பேர் பலி.

பிப்ரவரி 15 - டெல்லி ரெயில் நிலையத்தில் 18 பேர் பலி.

ஜூன் 4 - பெங்களூரு ஆர்.சி.பி. அணி ஊர்வலத்தில் 11 பேர் பலி.

செப்டம்பர் 27 - கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பலி.

1 More update

Next Story