முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் உண்மை நோக்கம் என்ன? - நயினார் நாகேந்திரன் கேள்வி

ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சற்று முன்பு ஜெர்மனியில் மூன்று நிறுவனங்களோடு ரூ.3,200 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார் என்று வெளியாகியுள்ள செய்தி பெருத்த ஏமாற்றத்தையும் வலுவான சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்களும், தமிழகத்தில் ஏற்கனவே பல வருடங்களாக இயங்கி வரும் நிலையில், மாநில முதல்வரே இங்கிருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு சென்று ஒரு படாடோப நாடகம் நடத்தவேண்டிய தேவை என்ன? ஒரே நாளில், முதல்வர் அறையிலேயே முடித்திருக்கக் கூடிய காரியத்திற்கு பத்து நாள் ஐரோப்பிய பயணம் எதற்கு?

அதிலும், தமிழகம் போன்ற ஒரு அதிகப்படியான GDP கொண்ட மாநிலத்திற்கு, ரூ.3,200 கோடி முதலீடெல்லாம் யானை பசிக்கு சோளப்பொரியே! கடந்த 2024-ம் ஆண்டு ஒரே ஒரு முறை வெளிநாட்டிற்கு பயணம் செய்து, மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ரூ.15 லட்சம் கோடி முதலீட்டை தனது மாநிலத்திற்கு கொண்டு வந்தார். அதே போல, தான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே, அமைச்சர்களை மட்டும் அனுப்பி, சுமார் ரூ.7 லட்சம் கோடி முதலீடுகளை உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஈர்த்தார்.

நமது தமிழக முதல்வரோ ஆறு முறை உலகத்தை சுற்றி வந்து, சொற்பத் தொகையான ரூ.18,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே ஈர்த்துள்ளார். அவற்றிலும் இன்றுவரை 95 சதவீத ஒப்பந்தங்கள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன! ஆக, இது முதலீடு எனும் பெயரில், மக்கள் பணத்தில் திமுக நடத்தும் மோசடி விளையாட்டல்லவா? இப்பொழுதாவது வாயைத் திறக்குமா விளம்பர மாடல் அரசு? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com