போலி செய்திகள் பரவ காரணம் என்ன? சென்னையில் நடந்த கருத்தரங்கில் பிபிசி நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியீடு

போலி செய்திகள் பரவுவதற்கு காரணம் என்ன? என்பது குறித்த ஆய்வு அறிக்கையை சென்னையில் நடந்த கருத்தரங்கில் பிபிசி நிறுவனம் வெளியிட்டது.
போலி செய்திகள் பரவ காரணம் என்ன? சென்னையில் நடந்த கருத்தரங்கில் பிபிசி நிறுவனம் ஆய்வு அறிக்கை வெளியீடு
Published on

சென்னை,

பிபிசி செய்தி நிறுவனம் சார்பில் போலி செய்திகளை தாண்டி என்ற தலைப்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று கருத்தரங்கு நடந்தது. போலி செய்திகளுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில், பிபிசி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த அறிக்கையை நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், போலி செய்தியும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவான அரசியல் நடவடிக்கையும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்கிறது. போலி செய்திகள் பரவுவதற்கு தேசப்பற்று உந்து சக்தியாக இருக்கிறது. இடதுசாரி சார்புடைய போலி செய்திகளை விட, வலது சாரி தொடர்புடைய செய்திகள் வேகமாக பரவுகின்றன. போலி செய்திகள் பரவுவதற்கு உணர்ச்சிவசப்படும் நிலை தான் முக்கிய காரணமாக அமைகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

ஆய்வு அறிக்கை குறித்து பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் அறிமுக உரையாற்றும்போது, ஆய்வுக்கு 16 ஆயிரம் டுவிட்டர் பயனாளர்கள், 70 ஆயிரம் பின்தொடர்பவர்கள், 3 ஆயிரத்து 200 முகநூல் பக்கங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. போலி செய்திகள் பெரும்பாலும் அரசியல், கொள்கை, பிரபலங்கள் மற்றும் கலாசாரம் சார்ந்த விஷயங்களிலே அதிகம் உலா வருகின்றன என்றார்.

போலி செய்திகள்: சவால்களும், தாக்கமும் என்ற தலைப்பில் நடைபெற்ற முதல் அமர்வில் நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் வாஸந்தி, வருமான வரித்துறை அதிகாரி பாஸ்கர் கிருஷ்ணமூர்த்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் காளிதாஸ் ஆகியோர் விவாதித்தனர். பிபிசி தமிழ் ஆசிரியர் தங்கவேல் நடுவராக அங்கம் வகித்தார்.

வாஸந்தி பேசும்போது, சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் மிகப்பெரும் சவாலாக உருவாகியுள்ளது. செய்திகளை உறுதிப்படுத்தாமல் போடும் தளங்கள் தற்போது வந்துவிட்டது. அது நமது அறிவுத்திறனை நாசமாக்கும் வகையில் இருக்கிறது. இதை கட்டுப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் என்றார்.

பிரகாஷ்ராஜ் பேசுகையில், சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் காட்டுத்தீ போல பரவுகிறது. இது மிகவும் ஆபத்தானது. போலி செய்திகளை நம்புவது நீண்டகாலமாக இருந்து வருகிறது. இப்போது போலி செய்திகள் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. நிம்மதி இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். ஆகவே இதனை தடுத்தாக வேண்டும் என்றார்.

காளிதாஸ் பேசும்போது, இயற்கைக்கு எதிரான திட்டத்தை அரசு கொண்டு வரும்போது அதை எதிர்ப்பவர்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். வெளிநாட்டில் இருந்து அவர்களுக்கு நிதி வருகிறது என்று கூறி தவறான செய்திகளை பரப்புகிறார்கள். இந்தியாவில் சிறுத்தை இல்லை. அதுபற்றியும் போலி செய்தி வெளிவருகிறது என்றார்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், போலி செய்திகள் வலிமையானது போல, பலவீனமானதும் கூட. வெளிவரும்போது அதுகுறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்யவேண்டும். போலி செய்திகளை தடுப்பதை விட, அதுகுறித்த உண்மைத்தன்மையை புரிய வைத்தாலே போதும் என்றார்.

போலி செய்திகளை தடுக்க என்ன தீர்வு என்ற தலைப்பில் பிற்பகல் நடந்த அமர்வில் நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு, தந்தி டி.வி.யின் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே, தமிழக பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, சமூக ஆர்வலர் டாக்டர் ஷாலினி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

குஷ்பு பேசும்போது, போலி செய்தியை கண்டுபிடிப்பதை விட உண்மையாக இருக்குமா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்கவேண்டும். அரசியல் கட்சி மட்டுமல்ல பொதுமக்களும் போலி செய்திகளால் பாதிப்படைகிறார்கள். போலி செய்திகளை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நடவடிக்கை எடுக்காததால் தான் போலி செய்திகள் அதிகமாகிவிட்டன என்றார்.

ரங்கராஜ் பாண்டே பேசுகையில், போலி செய்திகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் தான் பரப்பப்படுகின்றன. போலி செய்திகளை தடுக்க தவறான செய்தியை வெளியிடமாட்டேன் என்று ஒவ்வொருவரும் உத்தரவாதம் கொடுக்கவேண்டும். இவ்வாறு செய்தால் போலி செய்திகள் வராது. ஒவ்வொருவரும் போலியான செய்தியை புறக்கணித்தாலே, அது தானாக நின்றுவிடும் என்றார்.

நாராயணன் திருப்பதி பேசுகையில், போலி செய்திகள் அரசியல்வாதிகளிடம் இருந்துதான் உருவாகின்றன. போலி செய்திகளை தடுப்பதில் அனைத்து தரப்பினரும் தங்கள் கடமைகளை உணர்ந்து செயல்படவேண்டும். அனைவரும் பொறுப்புடன் நடந்து அதனை தடுக்கவேண்டும் என்றார்.

டாக்டர் ஷாலினி பேசும்போது, சமூக ஊடகங்களில் முடங்கி கிடப்பதே ஒரு நோய். இவ்வாறு இருப்பவர்கள் உளவியல் நிபுணர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டும். எல்லோரையும் சமமாக பாவித்தால் போலியான செய்திகளை தடுக்கலாம். நாமே இதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com