

சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடங்கிவைத்து தி.மு.க. உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் (மதுரை மத்திய தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன்:- பட்ஜெட் மீதான விவாதங்களில் பங்கேற்று 2016, 2017, 2019-ம் ஆண்டுகளில் ஏற்கனவே நான் பேசியிருக்கிறேன். தமிழக அரசுக்கு வருமானம் குறைந்து கொண்டே போகிறது. உற்பத்தியில் எத்தனை சதவீதம் வருமானம் வருகிறது என்று பார்த்தால், 10 சதவீதம் அது குறைந்திருக்கிறது. மத்திய தணிக்கை குழு அறிக்கையில் கூறப்பட்ட தகவல் இது. மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.
அரசுக்கு கட்டாய செலவுகள் உள்ளது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி கொடுப்பது இதில் அடங்கும். அரசுக்கு வருமானம் குறைந்துள்ளது. கட்டாய செலவுகள் அதிகரித்துள்ளது. அதனால், விருப்ப செலவுகளை குறைக்க முடியாது. எனவே, வருவாய் பற்றாக்குறை அதிகரிக்கிறது.
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- வருவாய் பற்றாக்குறை 2017-2018-ம் ஆண்டுகளில் ரூ.21,593.88 கோடியாகவும், 2018-2019-ம் ஆண்டுகளில் ரூ.23,559.44 கோடியாகவும் இருந்தது. மத்திய அரசு வரி நிதி பகிர்வை தமிழகத்திற்கு குறைத்தது தான் இதற்கெல்லாம் காரணம். இதனால், தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 2019-2020-ம் ஆண்டுகளில் ரூ.7,655 கோடி நிதி இழப்பை தமிழகம் சந்தித்துள்ளது.
மேலும், மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கான தனது நிதியை 60 சதவீதமாக குறைத்துக்கொண்டுள்ளது. மீதி பங்கை மாநில அரசு கொடுக்க வேண்டியுள்ளது. இதனால், தமிழகத்திற்கு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி கூடுதல் செலவு ஏற்படுகிறது. உதய் திட்டத்தை ஏற்றுக்கொண்டதால், அதற்குரிய கடனுக்கான வட்டியை ரூ.1,750 கோடி கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. வரி வருவாய் உயர்ந்து வருவதால், வரும் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை குறைய வாய்ப்பு இருக்கிறது.
பழனிவேல் தியாகராஜன்:- 2017-2018-ம் ஆண்டுகளில், வருவாய் பற்றாக்குறையில் தமிழகம் சாம்பியன் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. புதிய திட்டங்களை அறிவிக்கும்போது மேலும் கடன் அதிகரிக்கும்.
ஓ.பன்னீர்செல்வம்:- ஏதோ, அ.தி.மு.க. ஆட்சியில் தான் வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது போல் உறுப்பினர் இங்கே பேசுகிறார். தி.மு.க. ஆட்சி காலத்திலேயே வருவாய் பற்றாக்குறை இருந்தது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு, 0.18 சதவீதமாக வருவாய் உபரியை உயர்த்தினார். 2012-2013-ம் ஆண்டுகளில் வருவாய் உபரி 0.21 சதவீதமாக இருந்தது.
(இந்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் விரிவாக விளக்கம் தந்தார்)
பழனிவேல் தியாகராஜன்:- எதற்காக கடன் வாங்குகிறோம் முதலீடுகளுக்காக கடன் வாங்கலாம். அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.1,14,000 கோடி கடனில் ரூ.97 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மீதி கட்டாயச் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பால் எதிர்கால வளர்ச்சி வீழ்ந்து போகும்.
ஓ.பன்னீர்செல்வம்:- உறுப்பினர் அவரே கேள்வி கேட்டு, அவரே பதில் அளித்துக்கொள்கிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் 2009-2010-ம் ஆண்டு கடன் ரூ.14,024 கோடியில் ரூ.8,776 கோடி மூலதன செலவுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாக்கி தொகையை என்ன செய்தீர்கள்?
பழனிவேல் தியாகராஜன்:- உற்பத்தியில் கடன் அளவு 25 சதவீதத்தை தாண்டக்கூடாது. அதுதான் உண்மை. வருவாய் பற்றாக்குறைக்கு மூலகாரணம் வருமானம் குறைந்துவிட்டது. இதை திருத்தவில்லை என்றால் சுமை அதிகரித்துவிடும்.
அமைச்சர் பி.தங்கமணி:- 2017-ம் ஆண்டு உதய் திட்டக் கடன் தொகை ரூ.22,815 கோடியை நாம் ஏற்றுக்கொண்டோம். அதனால் தான் கடன் அளவு 16 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
ஓ.பன்னீர்செல்வம்:- மத்திய அரசு வகுத்துள்ள கடன் வரையறைக்கு உட்பட்டுத்தான் தமிழகம் இருந்து கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:- உதய் திட்டத்தை ஏற்க மத்திய அரசு வலியுறுத்தியபோது, நஷ்டத்தில் பங்கு தருவதாக சொன்னதா?.
அமைச்சர் தங்கமணி:- உதய் திட்டத்தை எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழகம் மட்டும் தான் அதில் 3 மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்பதை திருத்த வலியுறுத்தியது. அது ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகே தமிழகமும் கையெழுத்து போட்டது. நஷ்டத்தில் 50 சதவீத கடனுக்கு மத்திய அரசு நிதி தர வேண்டும் என்று இந்த பட்ஜெட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.