"தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி..?" - சமையல் எரிவாயு விலை குறைப்பு குறித்து ப. சிதம்பரம் டுவீட்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்து வந்தது. மாதத்துக்கு ரூ.50 வீதம் உயர்ந்தது. அந்தவகையில், சென்னையில் வீட்டுஉபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், கடைகளில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர் விலை அவ்வப்போது குறைக்கப்பட்டது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர் விலை குறைக்கப்படவில்லை. அதன் விலையை குறைக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு நேற்று திடீரென அறிவித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில்தான் விலை குறைப்பு முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார்.

இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில்,

"தேர்தல் வருகிறது என்பதற்கு என்ன அறிகுறி?... சமையல் காஸ் விலையை ரூ200 குறைத்திருப்பதே அறிகுறி!

ரூ1100 க்கு மேல் விலை வைத்து மக்களைக் கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்துக் கொள்கிறது பாரீர்!

வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைப்பு!" என்று அதில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com