

சென்னை
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அப்போது கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களைக் கூட வீட்டிலேயே முடக்கிப் போட்டுவிட்டது. நடிகர் ரஜினியும் வீட்டை விட்டு வெளியே வராமல் ஓய்வெடுத்து வருகிறார். அவரால் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட முடியவில்லை. அதேபோல், அவர் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்குவார் என்று, அவரது ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ரஜினி, தனது அரசியல் கொள்கைகளை அறிவித்தார்.
தனக்கு முதல்வர் பதவியில் விருப்பம் இல்லை என்று அவர் அறிவித்தது, ரசிகர்கள் சிலரை ஏமாற்றமடைய செய்தாலும், ரஜினியின் அரசியல் வருகைக்காகவும், முதல்வர் வேட்பாளராக யாரை முன்னிறுத்தப் போகிறார் என்பதையும் உற்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக கடந்த மார்ச் மாதமே வெளிநாடு சென்றிருக்க வேண்டிய ரஜினியின் பயணமும், கொரோனாவால் தடைபட்டுப் போனது. கொரோனா தாக்கம் முற்றிலுமாக நீங்கும் வரை அவரை வெளியில் செல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
அதனால் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் காலை, மாலை இருவேளைகளும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார்.
மேலும் அவர் தற்போது நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பும் இப்போது தொடங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. ஒருவேளை திரைப்படப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், முதலில் நடிகர் ரஜினிகாந்த் இல்லாத சில காட்சிகளையே படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம். இது ஒரு பக்கம் இருக்க, தொலைபேசி மூலம் நெருங்கிய நண்பர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் ரஜினி பேசி வருவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தொடங்குவது உறுதி என்ற நிலையில், தேர்தல் நெருங்கும் சமயத்தில் நிச்சயம் களம் இறங்குவார் என்பது உறுதியாகியிருக்கிறது. அதேபோல், கொரோனா முடிந்த பிறகு அரசியல் ஏற்பாடுகளை உடனடியாகத் தொடங்கிவிடலாம் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் கூறியுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசியலில் நாளுக்கு நாள் நிகழ்ந்துவரும் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாகக் கவனித்து வரும் ரஜினி, தேர்தல் சமயத்தில் அதற்கேற்ப முடிவெடுப்பார் என்கிறார்கள். ஒரு பக்கம் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் பொதுத்தேர்தல், மறுபக்கம் ரஜினியின் ஆன்மீக அரசியல் என 2021 சட்டமன்றத் தேர்தல் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே சொல்லலாம்.
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அப்போது கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடைபெறும் என கூறப்படுகிறது.