ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? - தமிழக அரசு உத்தரவு

சுதந்திர தினத்தில் நடக்க உள்ள கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 15-ல் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

சுதந்திர தினத்தில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை என்னென்ன? என்பது பற்றி அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் தாரேஷ் அகமது அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,

1998-ம் ஆண்டு நவம்பரில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திரத் தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்தக் கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆகஸ்ட் 15-ந் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதற்கு ஏதுவாக கிராம சபைக் கூட்டம் நடைபெறும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் தெரியப்படுத்தப்பட வேண்டும். இந்த கூட்டத்திற்கான செலவு வரம்பு ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தொடர்பான அறிக்கையை அரசுக்கு 22-ந் தேதிக்குள் கலெக்டர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதிச் செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை, அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை பறக்கவிடுதல் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும்.

மேலும், தனிநபர் சுகாதாரம், சுற்றுப்புற தூய்மை, எழில்மிகு கிராமம் பற்றிய விழிப்புணர்வு, கழிப்பறை பயன்பாடு, குப்பைகளை வீட்டிலேயே தரம் பிரித்தல், திடக்கழிவு-திரவக்கழிவு பற்றிய விழிப்புணர்வு, பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு, மாற்றுப் பொருட்கள் பயன்பாடு பற்றியிம் விவாதிக்க வேண்டும்.

மேலும், மழைநீர் சேகரிப்பு, நீர்வழிப்பாதை, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பை அகற்றுதல், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் மறுகணக்கெடுப்பு, ஜல்ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதமர் குடியிருப்புத் திட்டம் பற்றியிம் விவாதிக்க வேண்டும்.

மேலும், இந்தத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை மக்கள் குறைதீர் மையத்தில் 8925422215 மற்றும் 8925422216 ஆகிய போன் எண்களில் நேரடியாக பேசி தெரிவிக்கும் வசதி பற்றி மக்களிடம் தெரிவித்தல், சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, நிலமற்றவர்களுக்கு ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனை பட்டா வழங்குவது ஆகிய விஷயங்கள் பற்றி கிராம சபையில் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com