தனுஷ் பின்னால் பாஜக இருந்தால் என்ன தவறு? - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

நாங்களே பாஜகவுடன்தான் கூட்டணியில் உள்ளோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் சீனிவாசன்
Published on: 

மதுரை,

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் தனுஷ் பின்னனியில் பாஜக இருந்தால் என்ன தவறு? நாங்களே பாஜகவுடன்தான் கூட்டணியில் உள்ளோம். எந்த கட்சிக்கு பின்னால் இருக்க வேண்டும் என்பது நடிகர் தனுஷின் முடிவு.

உலகத்தினுடைய தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அந்த கட்சியுடன் தனுஷ் பேசினால் என்ன தவறு உள்ளது. பேசினாரா இல்லையா தெரியாது. பேசினால் என்ன தவறு? எஸ்.ஐ.ஆரில் இறந்த வாக்காளர்கள், இரட்டை பதிவு, வேறு இடத்திற்கு போனவர்கள் என எடுத்து பார்க்கும் போது பல கோடிகள் வருகிறது. அதை கணக்கு காட்டுகிறார்கள். தப்பு என்றால் நிரூபிக்க வேண்டும். மதுரையில் இவ்வளவு போனது, விருது நகரில் இவ்வளவு போனது. இதனால், பதவி விலக வேண்டும் என்று சொன்னால் பரவாயில்லை” என்றார்.

அரசியலுக்கு வரும் தனுஷ்?

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. விஜயின் இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது மட்டுமின்றி , பல தமிழ் நடிகர்கள் மனதிலும் அரசியல் ஆசையை விதைத்துள்ளது. சமீபத்திய காலமாக தனுஷ் , சிவகார்த்திகேயன் ஆகியோரின் தொடர் நடவடிக்கைகள் , அவர்கள் அரசியலுக்கு அச்சாரம் போடுவதைப் போல இருக்கிறது.

மகளிர் அணி சந்திப்பு

தனுஷ் தொடர்ச்சியாக அரசியல் சார்பு கொண்ட ஒரு சில பணிகளை வெளிப்படையாகவே மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவரது ரசிகர் மன்றம் நற்பணி இயக்கமாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் நேற்று சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ஒரு தனியார் கல்லூரியில் , மாவட்ட மகளிர் அணி கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வெள்ளி காமாட்சி விளக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

தாமரைக்கு முக்கியத்துவம்

அந்த விளக்கின் அடிப்பகுதியில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. பிரபல நகைக்கடையில் இருந்து வாங்கப்பட்ட அந்த விளக்கில் இந்த தாமரை சின்னத்தை பொறித்து பிரத்தியேகமாக வழங்குமாறு தனுஷ் தரப்பில் இருந்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்த காமாட்சி விளக்கு பின்புறத்தில் தாமரை சின்னம் போன்ற அச்சு பதியப்பட்டிருப்பதால் , தனுஷ் பாஜகவில் சேர இருக்கிறாரா? அல்லது, அவர் அறிவிக்க உள்ள அரசியல் கட்சியின் சின்னத்தில் தாமரை முக்கிய பங்காக இருக்குமோ? என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. எது எப்ப டியோ இந்த தாமரை சின்ன முத்திரை நேற்று பரபரப்பாக பேசப்பட்டது. வெள்ளி காமாட்சி விளக்குக்காக மட்டும் கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com