டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அமைச்சர் அருண்ராஜ் பதில்

சட்டசபையில் டெங்கு, பன்றி காய்ச்சல்கள் விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.
அமைச்சர் அருண்ராஜ்
Published on

சென்னை,

டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்தார்.

டெங்கு, பன்றி காய்ச்சல்கள்

சட்டசபையில் நிகழ்வில், டெங்கு, பன்றி காய்ச்சல்கள் விவகாரம் தொடர்பாக அரசின் கவனத்துக்கு உறுப்பினர்கள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக நடந்த விவாதம் வருமாறு:-

தி.மு.க. உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் (போடிநாயக்கனூர்) :- 2026 ஜூன் மாதம் வரை 7,011 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 3 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மு.க.ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டது. 23.8.2026 வரை 12,543 பேர் தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் மரணம் அடைந்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு சிறப்பு முகாம்கள் அமைத்தல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தல், கொசுக்கள் ஒழித்தல் போன்ற போதிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்று அமைச்சரை கேட்கிறேன்.

என்ன நடவடிக்கைகள்?

சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி பழனிசாமி:- தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகம் பரவுகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த ஆண்டைவிட பாதியாக குறைந்துள்ளது. 4 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அதேபோல் பன்றி காய்ச்சல் 1,558 பேர் பாதிக்கப்பட்டதாகவும், சிலர் இறந்ததாகவும் அமைச்சர் சொல்லியுள்ளார். டெங்கு, பன்றி காய்ச்சல்களை தடுக்க அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது?

டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு) :- டெங்கு, மலேரியா காய்ச்சல் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதனால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இந்த நோய்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது?.

சிவக்குமார் (பா.ம.க.) :- பருவமழைக்கு முன்னதாக பன்றிக் காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. தடுப்பு நடவடிக்கைகளாக அரசு என்ன செய்து இருக்கிறது?

ஆயத்தமாக உள்ளது

அமைச்சர் அருண்ராஜ்:- பருவமழை காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகமாகவே இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் 26.8.2026 வரை 12,856 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 7 உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக சென்னையில்தான் பதிவாகியுள்ளது. அரசு தினந்தோறும் டெங்கு காய்ச்சலை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். டெங்கு, பன்றி காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. கொசு உற்பத்தியாகும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு, கொசு புழுக்கள் ஒழிப்பும் நடக்கிறது. கொசு ஒழிப்பு பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்தப்பட்டு அதற்கான பணிகள் நடக்கின்றன. மருத்துவமனைகளில் தேவையான சிகிச்சைகளும் தயார்நிலையில் உள்ளது. தினசரி 5,805 மருத்துவமனைகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணிகள் நடக்கின்றன. டெங்கு, பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகளில் தமிழக அரசு ஆயத்தமாகவே உள்ளது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com