

சென்னை,
சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் விஜய் பேசும்போது, கடந்த 11.6.2026 அன்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பேசப்பட்ட விஷயத்தை எடுத்துக் கூறினார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு அரசின் சார்பில் நான் கலந்து கொண்டு வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம் உருவாக்கம் தேவையான நிதியையும், தமிழ்நாட்டுக்கு 2 எய்ம்ஸ் மருத்துவமனைகளை தருமாறும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கு பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இடங்களை நிரப்புவது குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனங்கள் வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் அமைப்பதும், இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு இயக்கம் செயல்படுத்த வேண்டியும்பேசினேன்.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்தும், மீனவ சமுதாயங்களின் வாழ்வாதாரம் மற்றும் மீன்பிடி படகுகள், மீனவர்கள் விடுவித்தல் குறித்து நிரந்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும், காலநிலை தாங்கும்தன்மை பெருந்திட்டம் 2045-ல் கீழ் விண்வெளி உற்பத்தி மையத்தை தேசிய விண்வெளி உற்பத்தி மையமாக அறிவிக்கக்கோரியும் பேசினேன்.
தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை, ரெயில்வே அமைச்சகத்தின் மேம்பாட்டு குறித்தும், அனைத்து கிராமங்களில் டிஜிட்டல் வசதி ஏற்படுத்துவது குறித்தும், கூட்டுகுடிநீர் திட்டம் தொடரவும், அரசின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கான முதலிடத்துக்கான கோரிக்கையும், மேகதாது அணை கட்டுமான நிறுத்தத்தை உறுதிப்படுத்து தொடர்பாக பேசினேன்.
மாநிலத்தின் மீது மும்மொழிக் கொள்கையை வற்புறுத்தாமல், புதிய கல்விக்கொள்கையை திணிக்காமல் தமிழகத்துக்கான கல்வித்தொகையான ரூ.3,284 கோடியை விடுவிக்கக் கோரியும், ஆண்டுதோறும் 5 லட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியை தொழில்நுட்ப பயிற்சி வழங்க ஒத்துழைப்பு வழங்குமாறும், ஒகேனக்கல் 3-ம் கட்ட கூட்டு குடிநீர் திட்டத்துக்கான நிதி ரூ.2,283 கோடியே 40 லட்சத்தை விடுவிக்க கோரியும், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை உருவாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் மற்றும் திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறும் தமிழ்நாடு அரசு சார்பில் பேசியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.