

சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் திரை உலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சினிமா மேடைகளில் எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தயாரிப்பாளர் கே.ராஜன் மிகவும் தைரியமாக தனது கருத்துக்களையும் பொதுவெளியில் தெரிவிப்பவர் ஆவார். இப்படி துணிச்சலுக்கு சொந்தக்காரராக திரை உலகினரால் பார்க்கப்பட்ட கே.ராஜன் தனது 85 வயதில் இது போன்ற ஒரு துயர முடிவை எடுத்திருப்பது அவரது குடும்பத்தினராலும், திரை உலகினராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கே.ராஜன் தற்கொலைக்கு அவர் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்தது முக்கிய காரணம் என்றும், உடல்நலக் கோளாறாலும் அவதிப்பட்ட அவர் இதுபோன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் கே.ராஜனின் குடும்பத்தினர் இதனை முழுமையாக மறுத்துள்ளனர். எங்கள் குடும்பத்துடன் எப்போதும் தொடர்பில் தான் தந்தை இருந்துள்ளார். அவருடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதில்லை என்றும், சில நாட்கள் முன்புகூட என்னுடன் மிகவும் வெளிப்படையாக பல விஷயங்களை அவர் பேசினார் என்றும் கே.ராஜனின் மகன் சுரேஷ்ராஜன் தெரிவித்துள்ளார். ஆனால் எங்கள் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தவறான தகவல்களை பரப்பி விட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக சுரேஷ் அளித்த பேட்டி வருமாறு:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலருக்கு எனது தந்தை கடன் கொடுத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடன தொகை முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடன் கொடுத்தவர்களிடம் பலமுறை அவரம் பேசுவதற்கு முயற்சி செய்துள்ளார். இதனை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது கடன் வாங்கியவர்கள் போனைகூட எடுப்பதில்லை என்று என்னிடம் கூறி கவலைப்பட்டுள்ளார். ரூ.20 கோடி வரை கடன் வாங்கிக்கொண்டு பலர் ஏமாற்றிவிட்டனர். இதன் காரணமாகவே எனது தந்தை ராஜன் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். அதனாலேயே அவருக்கு உடல்நலனும் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் பெற்றுள்ளார். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலையிலும் அவர் கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பித்தர மறுக்கிறார்களே என்று கூறி வந்தார். இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
எனது தந்தை யார், யாருக்கு கடன் கொடுத்துள்ளார் என்பதற்கான அனைத்து ஆவணங்களும், கடன் வாங்கியவர்கள் கொடுத்த காசோலைகளும் எங்களிடம் உள்ளது. அதனை சினிமா தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவித்து முறைப்படி எனது தந்தைக்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரும்ப பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். யார், யாருக்கு எனது தந்தை கடன் கொடுத்துள்ளார் என்பதையும், அவரை ஏமாற்றியவர்கள் யார் என்ற தகவலையும் இப்போதைக்கு வெளியில் தெரிவிக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் ரவுடிகள் யாரையாவது வைத்து மிரட்டினார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. கே.ராஜனுக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலர் இந்த சந்தேகங்களை எழுப்பி இருக்கிறார்கள். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடம் கேட்டபோது, 'எங்களுக்கு தெரிந்து அதுபோன்று எந்த மிரட்டல்களும் வரவில்லை என்றும் ஒரு வேளை அதுபோன்ற மிரட்டல்களை அவர் எங்களிடம் தெரிவிக்காமல் விட்டு விட்டாரா என்பது தெரியவில்லை என்றும் கூறினார்கள்.
கே.ராஜன் தற்கொலை சம்பவம் தொடாபாக அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று காலையில் அடையாது போலீசாரிடம் கே.ராஜன் தற்கொலை செய்தது ஏன் என்பது பற்றி கேட்டபோது அவர்கள் தெரிவித்த தகவல் வேறு விதமாக இருந்தது. கே.ராஜனின் குடும்பத்தினரிடம் நாங்கள் விசாரித்தபோது உடல்நலக் கோளாறு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். கடன் பிரச்சினை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை என்று கூறினார்கள். இப்படி கே.ரான் குடும்பத்தினர் கூறிய தகவலும், போலீசார் தெரிவித்த தகவல்களும் முரண்பட்டதாக இருந்தன.
எப்போதுமே போலீஸ் விசாரணையில் குடும்பத்தினர் மாறுபட்ட தகவல்களை தெரிவிக்க மாட்டார்கள். அந்த வகையில் போலீஸ் விசாரணையின்போதும் கே.ராஜனின் குடும்பத்தினர் கடன் பிரச்சினை பற்றி நிச்சயம் கூறி இருப்பார்கள். ஆனால் போலீசாரோ கடன் விவகாரம் பெரிதானால் அது பூதாகரமாகி விடுமோ என்ற எண்ணத்தில் கே.ராஜன் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்தார் என்ற தகவல்களை மறைத்தார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் ராஜன் மிரட்டப்பட்டது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.