முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தவெக தலைவர் விஜயின் முதல் அறிவிப்பாக எது இருக்கும்?

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என விஜய் வாக்குறுதி அளித்து இருந்தார்
முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தவெக தலைவர் விஜயின் முதல் அறிவிப்பாக எது இருக்கும்?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட்டது.

107 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடினார். தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றி செய்தியை கேட்டு, விஜய் உற்சாகம் அடைந்தார்.

இந்தநிலையில், நாளை மறுநாள் (மே 7) த.வெ.க. தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பதவியேற்பு விழாவை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

பதவியேற்பு விழா மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் சென்னையில் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

விஜய் முதல்-அமைச்சராக பதவியேற்கும் அதே நாளில் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். யார், யாருக்கு என்ன அமைச்சர் பதவி என்பது குறித்த ஆலோசனைகளும் தவெகவில் தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தவெக தலைவர் விஜயின் தேர்தல் வாக்குறுதியின் முதல் அறிவிப்பாக எது இருக்கும்? என சமூக வலைதளங்களில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அவர் அறிவித்த முக்கியமான சில வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள்

* குடும்பதலைவிகளுக்கு மாதம் ரூ.2,500

* குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்.

* ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்

* முதியோருக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்

* பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இவற்றில் விஜய் முதலில் எந்த கோப்பில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com