கூட்டுறவு சங்க தேர்தல் எப்போது? - அமைச்சர் பெரியகருப்பன் பதில்

2,713 ரேஷன் கடைகள் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாறும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-
கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் 6,215 கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன. இதில் 3,502 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 2,713 ரேஷன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாறும்.
கடந்த காலங்களில் முறையாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறாத காரணத்தால் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படவில்லை. கூட்டுறவு சங்கத்தில் 2 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 949 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இயற்கை மரணம், உறுப்பினராக நீடிக்க தகுதியின்மை, உரிய பங்குத்தொகை செலுத்தாமை போன்ற பல்வேறு காரணங்களுக்காக உறுப்பினர்கள் பட்டியலில் இருந்து ஏராளமானோர் நீக்கப்பட்ட நிலையில் தற்போது 1 கோடியே 59 லட்சத்து 3 ஆயிரத்து 966 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
நீதிமன்ற வழிகாட்டுதல்படி இவர்களில் 97 லட்சத்து 83 ஆயிரத்து 634 பேர் மட்டுமே ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை இணைத்துள்ளனர். மீதமுள்ள உறுப்பினர்களிடம் இந்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி முடிந்தததும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.






