சென்னையில் இருந்து கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடுவது எப்போது? - ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியது

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது. எனவே, அந்த நகரங்களுக்கு விரைவில் ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து கன்னியாகுமரி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடுவது எப்போது? - ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கியது
Published on

சென்னை,

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில், விமான சேவை உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

மாநில அரசுகளின் அனுமதி பெற்று சிறப்பு ரெயில்களை இயக்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் ஒப்புதலுடன் கோவை-காட்பாடி, மதுரை-விழுப்புரம், நாகர்கோவில்-திருச்சி, திருச்சி-செங்கல்பட்டு (விருத்தாசலம் மார்க்கமாக), திருச்சி- செங்கல்பட்டு (மயிலாடுதுறை மார்க்கமாக), கோவை-அரக்கோணம், கோவை-மயிலாடுதுறை ஆகிய 7 வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், தமிழக அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே ரத்து செய்தது. தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து தொடங்கியது. வருகிற 7-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பஸ் போக்குவரத்து தொடங்க இருக்கிறது. ரெயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதால், தமிழகத்தில் ரெயில்கள் எப்போது ஓடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இந்த நிலையில், தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க முடிவு செய்து, அதற்காக ரெயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டது.

தெற்கு ரெயில்வேயின் இந்த கோரிக்கையை பரிசீலித்த ரெயில்வே வாரியம், தமிழகத்தில் 7 சிறப்பு ரெயில்கள் மற்றும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க நேற்று அனுமதி வழங்கியது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் முடிவில், தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டு இருந்த 7 சிறப்பு ரெயில்களை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் தமிழகத்தில் வழக்கமாக இயக்கப்பட்டு வந்த சில முக்கிய ரெயில்களை தேர்வு செய்து, அவற்றை இயக்குவதற்கு ரெயில்வே வாரியத்திடம் அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு ரெயில்வே வாரியம் நேற்று அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி முதற்கட்டமாக சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் -கோவை சேரன் எக்ஸ்பிரஸ், எழும்பூர் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், எழும்பூர் - செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ், சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் -மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி உள்ளது.

இந்த ஒப்புதலின் அடிப்படையில், மேற்கண்ட ரெயில் களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர்கள் உள்ளிட்ட இடங்களில், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், ரெயில் பயணத்தின் போது நோய்த்தொற்று பரவுவதை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே வாரியம் அனுமதி வழங்கி இருப்பதால், தமிழகத்தில் மேற்கண்ட 6 எக்ஸ்பிரஸ் ரெயில்களும் விரைவில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com