எப்போது ரேஷன் பொருட்கள் வாங்கலாம்? நாளை, நாளை மறுநாள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மே மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் எந்த நாளில் வாங்க வேண்டும்? என்பதற்கான டோக்கன்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் வீடு வீடாக வந்து வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எப்போது ரேஷன் பொருட்கள் வாங்கலாம்? நாளை, நாளை மறுநாள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் - முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றை தடுக்க நாட்டிலேயே முதன்முதலாக தமிழக அரசு, மாநிலம் முழுவதற்குமான முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க, ஊரடங்கு உத்தரவு காலம் ஆரம்பிக்கும் முன்பே, ரூ.3,280 கோடி மதிப்பில் சிறப்பு நிவாரண உதவிகளை வழங்க ஆணையிட்டது.

அதில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் விலையின்றி வழங்க உத்தரவிடப்பட்டது. இன்றுவரை ஒரு கோடியே 89 லட்சத்து ஓராயிரத்து 68 குடும்பங்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

15-ந் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதற்கு முன்பே, 13-ந் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு எப்போதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தேன்.

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், 24 மற்றும் 25-ந் தேதிகளில் (நாளை மற்றும் நாளை மறுநாள்) ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும்.

அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

சமூக இடைவெளியை கடைப்பிடித்து, பொதுமக்கள் தங்களுக்குரிய அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com