

சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஜூன் 27-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இதனிடையே, தன் மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அன்பில் மகேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அன்பில் மகேஷ் தரப்பில், கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதி லட்சுமி நாராயணன், ‘கவர்னர் பதவியை ஆட்டு தாடியுடன் ஒப்பீடு செய்து, அந்த பதவியே தேவையில்லாதது என்று சொன்னது தி.மு.க. தானே? கவர்னரின் அதிகாரம் பற்றி தி.மு.க. எப்போது பேச ஆரம்பித்தது?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஷ் தொடர்ந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.