பீரோவை உடைக்க எட்டி உதைத்தபோதுகண்ணாடி குத்தி காலில் பலத்த காயம்

தொழில் அதிபரின் வீடு புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன், அங்கிருந்த பீரோவை உடைக்க எட்டி உதைத்தபோது, காலில் கண்ணாடி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது.
பீரோவை உடைக்க எட்டி உதைத்தபோதுகண்ணாடி குத்தி காலில் பலத்த காயம்
Published on

சிவகாசி,

தொழில் அதிபரின் வீடு புகுந்து கைவரிசை காட்டிய கொள்ளையன், அங்கிருந்த பீரோவை உடைக்க எட்டி உதைத்தபோது, காலில் கண்ணாடி குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச்சொட்ட தப்பிய கொள்ளையன் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

தொழில் அதிபர் வீடு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரத்த சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் பேன்சிரக பட்டாசுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் அட்டை குழாய்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணன், சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சென்னை சென்று அங்குள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அந்த பகுதியில் வசித்து வரும் மகள் உமா, அவ்வப்போது தனது தந்தையின் வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம்.

கதவு உடைப்பு

இந்தநிலையில் நேற்று காலை உமா வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது பல இடங்களில் ரத்த கறையாக இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து தன் தந்தைக்கும், திருத்தங்கல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வீட்டின் படுக்கை அறையில் இருந்த பீரோவை உடைக்க முயற்சி செய்த கொள்ளையன், தனது காலால் பீரோவை எட்டி உதைத்துள்ளான். அப்போது, பீரோ கண்ணாடி உடைந்து அவன் காலை குத்தி கிழித்துள்ளது.

இதனால் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச்சொட்ட கொள்ளையன், அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. காலில் ஏற்பட்ட காயத்துடன் கொள்ளையன் வீடு முழுவதும் நடந்து சென்றதால் வீட்டின் பல இடங்களில் அவனது கால்தடம் பதிந்துள்ளது.

வலைவீச்சு

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் வீட்டில் இருந்த நகை, பொருட்கள், பணம் ஏதும் கொள்ளை போகவில்லை என்று தெரியவந்தது. தடயவியல் நிபுணர்கள், வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர்.

போலீஸ் மோப்ப நாய், அந்த வீட்டில் மோப்பம் பிடித்துவிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் ரோடு வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையனை பிடிக்க பாலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com