பஹல்காம் தாக்குதலுக்கு போராடாதவர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பா? அண்ணாமலை விமர்சனம்

காமேனி படுகொலையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலுக்கு போராடாதவர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பா? அண்ணாமலை விமர்சனம்
Published on

சென்னை,

ஈரான் மீதான அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு ஷியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் அமெரிக்க தூதரகம் முற்றுகை பேரணி போராட்டம் நடைபெற்றது. பேரணிக்கு சென்னை ஷியா அமைப்பின் தலைமை காஜி குலாம் முகமது மெகதி தலைமை தாங்கினார். பேரணியானது சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள அமீருன் னிசா பேகம் கப்ரஸ்தான் (மயானம்) அருகில் இருந்து புறப்பட்டது.

பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளூர் ஷாநவாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி, திராவிட வெற்றிக் கழகத்தின் தலைவர் மல்லை சத்யா, தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். பேரணியில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கோஷங் களை எழுப்பியபடி பேரணியாக அமெரிக்க தூதரகத்தை நோக்கி பீட்டர்ஸ் சாலையில் நடந்து வந்தனர். அவர்களை போலீசார் புதுக் கல்லூரி அருகே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில், தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நேற்று திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர். அதற்கு காவல்துறை முழு பாதுகாப்பை வழங்கி உள்ளது. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் போராட வில்லை.

ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள் போராடினால் கைது செய்யப்படுகின்றனர். திமுகவைப் பொறுத்தவரை, திருப்திப்படுத்துதல் எப்போதும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் என அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com