

சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆதவ் அர்ஜுனா உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உரையாற்றினார். இது குறித்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
ஆட்சிக்கு வரும்வரை சமூகநீதி, மக்கள் நலன் என்றெல்லாம் பிரசாரம் செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு அதிகாரத்தை மக்களுக்கு விரோதமாகப் பயன்படுத்தியது. குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிழல் அதிகாரங்கள் மூலம் சர்வாதிகாரம் புரிந்தது.
ஐந்தாண்டு திமுக ஆட்சியைத் திரும்பிப் பார்க்கும்போது ஊழலும் சுரண்டலும் மட்டுமே தெரிகிறது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வாழ்வாதார தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை. குறிப்பாக, வடசென்னையில் அரசியல் ஆதாயத்திற்காக எந்தவித வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை.
'ஒவ்வொருமுறையும் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படாதா' என்று காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இந்நிலையில், "மக்கள் நலன், மக்களுக்கான முன்னேற்றம், மக்கள்தான் இனி என் வாழ்வு" என்று மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு, மக்களுடன் களத்தில் நிற்கிறார் வெற்றித் தலைவர்.
மக்கள் அவரை தங்கள் மகனாக, தங்கள் வீட்டில் ஒருவராகப் போற்றி வாழ்த்துகிறார்கள். இன்று, மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் கழகத் தலைவர் மக்களாட்சியை வெல்வார், அனைவருக்குமான நல்லாட்சியை வழங்குவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.